மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதைக் கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூறுவதிலும் சந்தோஷம் அடைகின்றனர...
மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதைக் கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூறுவதிலும் சந்தோஷம் அடைகின்றனர். இது போன்று தான் இஸ்லாமிய சமூகத்திற்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமை இருக்கிறது. முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை வராந்த திருநாளாக ஆக்கி இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.
அல்லாஹ் தனது அருள்மறையாம் திருக்குர் ஆனில் ஜும்மா உடைய நாளைப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளான்:- "ஜும்ஆவுடைய நாளில் நீங்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை வணங்க பள்ளிவாசலுக்கு விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்."
(அல்குர்ஆன்:- 62 அத்தியாயம் // 9ஆம் வசனம்)
ஜும்ஆவுடைய நாளின் சிறப்புக்கள்
01) நாட்களில் சிறந்த நாள்.
02) நன்மைகள் அதிகமாக உள்ள நாள்.
03) பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு அற்புத நேரம் கொண்ட நாள்.
04) மறுமை நிகழக்கூடிய நாள்.
05) பாவங்கள் மன்னிக்கப்படக் கூடிய நாள்.
06) இறைவனின் மாளிகையான பள்ளிக்கு, நடந்து செல்வதற்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய அற்புத நாள்.
07) பத்து நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும் அருமையான நாள்.
08) தர்மம் செய்வதை ஏனைய நாட்களை விடவும் சிறப்புக் கொண்ட நாள்.
09) நமது ஆதி பிதா தந்தையான செய்யிதுனா ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாள்.
10) அனைத்து ஊர் மக்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் ஒற்றுமை தினத்தைக் கொண்ட நாள்.
இவ்வாறாக பல அற்புதமான, அருமையான சிறப்புக்களைக் கொண்ட நாளாக இந்த வெள்ளிக்கிழமை நாள் திகழ்கின்றது.
குர்ஆன் சுன்னா வழியில் வெள்ளிக்கிழமைத் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள்.
01) ஜும்ஆ உடைய சுன்னத்தான குளிப்பை குளித்தல் வேண்டும்.
02) அழகான ஆடைகள் அணிந்து, வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ள வேண்டும்.
03) வீண் பொழுது போக்குகளை விட்டு நேர காலத்துடன் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்.
04) இறுதித்தூதர் எம்பெருமானார் ﷺ அவர்கள் மீது அதிக அதிகமாக ஸலவாத்துக்கள் ஓதிக் கொள்ள வேண்டும்.
05) அல்குர்ஆனில் இடம்பெறும் அத்தியாயம் சூரத்துல் கஹ்ஃப் இனை ஓதிக் கொள்ள வேண்டும்.
06) இமாம் அவர்கள் ஜும்மா பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அருகில் இருப்பவர்களோடு பேசாமல் அப்பிரசங்கத்தை வாய் மூடி காது தாழ்த்தி சிறந்த முறையில் செவிமடுக்க வேண்டும்.
07) நமக்கு முன் பள்ளிவாசலுக்குச் சென்று அமர்ந்திருப்பவர்களைத் தாண்டி அவர்களின் பிடரியைக் கடந்து செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
08) ஜும்மா தொழுகை முடிந்து விட்டால் வழமைப் போல் தொழுகைக்குப் பின்னால் ஓதக்கூடிய அனைத்து திக்ருகளையும், தஸ்பீக்ஃகளையும் ஓதிக் கொள்ள வேண்டும்.
09) பின்னர் பள்ளியில் இரண்டு இரண்டு ரக்கஅத்துகளாக நான்கு ரக்கஅத்துக்கள் சுன்னத் தொழுகையை தொழவேண்டும்.
10) வீட்டில் தொழக் கூடியவர்களாக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டு ரக்கஅத்துக்களும், வீட்டில் 2 ரக்கஅத்துக்களும் தொழுது கொள்ள வேண்டும்.
இவ்வாறாக பலதரப்பட்ட நிறைய ஒழுங்குகளை பேணப்பட வேண்டிய நாள் இந்த வெள்ளிக்கிழமை எனும் ஜும்மா உடைய நாள். நம்மில் பலர் ஜும்ஆவுடைய நாளின் சிறப்புக்கள், ஒழுங்குகள் பற்றி அறிந்திருந்தும் அந்த நாளை கண்ணியப்படுத்த மறந்துவிடுகிறோம்.
இந்தப் பதிவு உங்களுக்கு ஜும்ஆவுடைய சிறப்புகளை நினைவுபடுத்துவதாக இருக்கட்டும். ஆனால்....
சிந்திப்பதற்காக சில கேள்விகளை நாம் உங்கள் முன்னே வைக்கின்றோம்.
01) புனித மிக்க இந்த ஜும்மா உடைய தினத்தில் நாம் அதிகமான நன்மைகளைச் செய்யக்கூடியவர்களாக இருக்கின்றோமா?.
02) இமாம் அவர்கள் மின்பருக்கு ஏறுவதற்கு முன்னால் ஜும்மா தொழுகைக்கு நாம் செல்கின்றோமா?.
03) ஜும்மா உடைய தினத்தில் விசேடமாக தான தர்மங்கள் செய்யக்கூடிய பழக்கம் உள்ளவர்களாக நாம் உள்ளோமா?.
04) ஜும்மா உடைய தினத்தில் அனைத்து ஒழுங்கு முறைகளையும் நாம் பின்பற்றுகிறோமா?.
என்கின்ற இந்த கேள்விகளை எமக்குள் நாங்களே கேட்டு எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்து பார்க வேண்டும்.
அன்பான என் இஸ்லாமிய உறவுகளே! ஜும்மா உடைய தினத்தின் சிறப்புகள் மற்றும் அதன் ஒழுங்குகளை விலங்கி அல்லாஹ்வை வணங்கக்கூடிய நன்மக்களாக வாழ நாம் அனைவரும் முயற்சிப்போமாக!.
ஆமீன்...! ஆமீன்...!யாரப்பல் ஆலமீன்...!