ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைப் பார்த்து ஓடக்கூடிய நேரம், ஒரு பிள்ளை தன்னுடைய தாய் தந்தையர்களைப் பார்த்து ஓடக்கூடிய நேரம், உலக மக்கள் அனைவ...
ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைப் பார்த்து ஓடக்கூடிய நேரம், ஒரு பிள்ளை தன்னுடைய தாய் தந்தையர்களைப் பார்த்து ஓடக்கூடிய நேரம், உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பார்த்து எங்கே இவர் என்னுடைய நன்மைகளை எல்லாம் கேட்டு விடுவார்களோ என்று ஒருவருக்கொருவர் மறைத்துக் கொள்ளக் கூடிய அந்த நேரம்; அந்த நேரத்தில் நாங்கள் பிரார்த்தனை செய்யக் கூடிய, எங்களோடு துணையாக நிற்கக்கூடிய எங்களுடைய ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வும் எங்களோடு பேசாமலும், பார்க்காமலும், பாவங்களை மன்னிக்காமலும் இருந்தாள் அவர்களைப் போன்ற மிகப் பெரும் நஷ்டவாளி யாராகத்தான் இருக்க முடியும்.
அந்த மஹ்ஷர் உடைய நேரத்தில் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் யாரோடு பேசாமல் இருப்பான், ஏன் பேசாமல் இருப்பான் என்று அருமை நாயகம் ﷺ அவர்கள் தெளிவாகச் சொல்லிக் காட்டினார்கள்.
கோமான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்; "கியாமத் நாளில் அல்லாஹ் மூன்று மனிதர்களிடம் பேசமாட்டான். அவர்களைப் பார்க்க மாட்டான். அவர்களைச் சுத்தப்படுத்தவும் மாட்டான் (அதாவது அவர்களுடைய பாவங்களை மன்னிக்கவும் மாட்டான்). அவர்களுக்குக் கடுமையான வேதனைகளும் உண்டு" என்பதாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள்.
மேலும் இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய சஹாபி சொல்கிறார்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த விடயத்தை மூன்று தடவைகள் சொன்னார்கள். மேலும் அச்சஹாபி அல்லாஹ்வின் தூதரே அந்த மூன்று ரபர்களும் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள் என்று கூறினேன். பின்பு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் இப்படிக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே! அந்த 3 நபர்களும் யார்?. அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள்; "இதில் முதலாவது நபர் வேட்டியை அணிந்திருக்கும் போது தரையில் படுமாறு பூமியில் தொங்கவிட்டு இழுத்துச் செல்பவர்கள். இரண்டாவது நபர், தான் செய்த உதவியை சொல்லி காட்டுபவர்கள். மூன்றாவது நபர் பொய் சத்தியம் செய்து தனது பொருட்களை விற்பனை செய்தவர்கள்."
(முஸ்லிம்:- 106)
இந்த மூன்று கூட்டத்துடன் தான் அல்லாஹ் நாளை அவருடைய வேளையிலே பேச மாட்டான், அவர்களைப் பார்க்க மாட்டான், அவர்களுடைய பாவங்களை மன்னிக்கவும் மாட்டான். எனவே இந்த மூன்று காரியங்கள் எம்மிடத்தில் இருந்தாள் அவைகளை விட்டும் தவிர்ந்து கொண்டு இதற்கு முன்னால் செய்த பாவங்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீண்டு கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம் அத்தனை பேர்களுடைய பாவங்களையும் மன்னித்து அருள் புரிவானாக...
ஆமீன்... ஆமீன்... யாரப்பல் ஆலமீன்...