ஒவ்வொரு மனிதர்களும் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கைக்காக கேள்வி கணக்குக் கேட்கப்படக் கூடிய நேரம் தான் அ...
ஒவ்வொரு மனிதர்களும் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கைக்காக கேள்வி கணக்குக் கேட்கப்படக் கூடிய நேரம் தான் அந்த மறுமை நாள். அந்த மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் ஒவ்வொருவரும் இறைவனுக்கு முன்னால் கேள்வி கணக்கிற்காக வேண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள்.
அந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதரும் தான் செய்த பாவத்திற்கு ஏற்ப அவரவருடைய தலைக்கு மேலால் சூரியன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதரும் தனக்கு ஏதாவது ஓர் நிழல் கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் இருக்கும் நிலையில், அல்லாஹ் ஒரு சில குறிப்பிட்ட ஏழு மனிதர்களுக்கு மாத்திரம் அவனது நிழலை வழங்குகின்றான்.
எனவே அல்லாஹ் அவனது நிழலைக் கொடுக்கும் நபர்கள் யார்?. எதற்காக வேண்டி அவர்கள் இவ்வாறான ஓர் அந்தஸ்தைப் பெருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்வொரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு நபர்களுக்கு வழங்குகின்றான்.
அவர்கள்...
01) நீதியை நிலை நாட்டும் தலைவர்.
02) அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறி இருக்கும் இளைஞர்.
03) பள்ளிவாசல்களுடன் தனது உள்ளத்தைத் தொடர்புபடுத்தியிருக்கும் ஒருவர்.
04) அல்லாஹ்விற்காகவே இணைந்தும், அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரண்டு நண்பர்கள்.
05) உயர் அந்தஸ்தில் உள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போதும் 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லி அப்பாவத்தை விட்டும் விரண்டோடும் மனிதன்.
06) தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்.
07) தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்."
இந்த ஹதீஸினை அபூஹுரைரா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்:- புஹாரி - 660)
இந்த ஏழு பேர்களுக்குத்தான் அல்லாஹ் தனது நிழலை வழங்குவதாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
எனவே இந்த ஏழு நபர்களில் நாமும் இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அத்தோடு இந்தக் கூட்டத்தில் எங்களையும் அல்லாஹுத்தஆலா இணைத்துக் கொள்வதற்கு நாங்கள் முயற்சிப்போமாக...
இன்ஷா அல்லாஹ்...!