இஸ்லாம் ஆண்களுக்குப் பட்டுத் துனியினாலான ஆடைகளையும்; தங்கம், வெள்ளி போன்ற வற்றினாலான ஆபரணங்களையும் தடைசெய்துள்ளது. மேலும் ஆண்களுக்கு வெள்...
இஸ்லாம் ஆண்களுக்குப் பட்டுத் துனியினாலான ஆடைகளையும்; தங்கம், வெள்ளி போன்ற வற்றினாலான ஆபரணங்களையும் தடைசெய்துள்ளது. மேலும் ஆண்களுக்கு வெள்ளியினாலான ஓர் மோதிரத்தை மாத்திரம் அணிந்து கொள்வதற்கும் இஸ்லாம் அனுமதி அளித்திருக்கிறது. இது நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய சுன்னத்துமாகும்.
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வெள்ளியினாலான ஓர் மோதிரத்தை அணிந்திருந்தார்கள். அந்த மோதிரத்தில் அல்லாஹ், ரசூல், முஹம்மத் என்று அரபியினால் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த மோதிரத்தினால் தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கடிதங்களில் முத்திரையும் இடுவார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அணிந்திருந்த மோதிரம் அவர்களுக்குப் பின்னால் யாரிடத்தில் இருந்தது, தற்பொழுது அதற்கு என்ன ஆனது என்பதைக் குறித்து ஆராய்வோம்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது அவர்களின் கையில் (வாழ்நாள் முழுவதும்) இருந்தது. (அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுடைய மரணத்திற்குப்) பிறகு, அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் கையில் இருந்தது. (அவர்களுடைய மரணத்திற்குப்) பிறகு உமர் (ரழி) அவர்களின் கையில் இருந்தது. (அவர்களுடைய மரணத்திற்குப்) பிறகு உஸ்மான் (ரழி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது 'அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்து விட்டது.ஆம், உஸ்மான் (ரழி)அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களுடைய கையிலிருந்து 'அரீஸ்' எனும் கிணற்றில் தவறுதலாக அந்த மோதிரம் விழுந்தது. பின்பு உஸ்மான் (ரழி) அவர்களின் கட்டளைக்கிணங்க கிணற்றில் நீரை இறைத்து இரண்டு நாட்கள் தேடிய போதும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை. பிறகு அந்த மோதிரத்தை தேடும் முயற்சியை கைவிட்டனர்.
(புஹாரி:- 5,873)
ஆகவே அன்று அந்த கிணற்றில் விழுந்த தோடு நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய மோதிரத்தின் வரலாறும் முற்றுப் பெற்றுவிட்டது.
அல்லாஹு அக்பர்...!
COMMENTS