பெருமானார் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இவ்வுலகிற்கு வந்துதித்த மாதம் புனித ரபீஉல் அவ்வல் மாதமாகும்.
இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தினை உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீதான முஹப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புகழ் மாலைகள் பாடியும், வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறியும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீலாத் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றார்கள்.
பொதுவாகவே, அல்லாஹ் நபிமார்களின் பிறந்த தினங்களை ஸலாமத் நிறைந்த நாட்கள் என்று அல்குர்ஆனில் அடையாளப்படுத்துகிறான்.
அல்லாஹ் தனது அருள்மறை திருக்குர்ஆனில் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த தினம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
எனவே, (நபி யஹ்யா) அவர் பிறந்த தினத்திலும், அவர் மரணிக்கும் தினத்திலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் தினத்திலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.
(அல்குர்ஆன் - 19:15)
“மேலும், நான் பிறந்த தினத்திலும், நான் மரணிக்கும் தினத்திலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் தினத்திலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
(அல்குர்ஆன் - 19:33)
திங்கட்கிழமை தினத்தன்று நோன்பு வைற்பது பற்றி நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நபிகள் நாயகம் ﷺ அவர்கள், "நான் பிறந்த தினமும், எனக்கு வஹீ அறிவிக்கப்பட்ட தினமும் அதுதான்" என்று பதிலளித்தார்கள்
(நூல் : முஸ்லிம்)
எனவே, நபிகள் நாயகம் ﷺ அவர்களின் (மீலாது) பிறந்த தினம் என்பது; ஒரு முஸ்லிம் எளிதாக கடந்து செல்லும் ஏனைய தினத்தைப் போன்று அல்ல என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை என்றே கூறலாம்.
யார் ஒருவர் நபிமார்களை தம்முடன் இணைத்துக் கொள்கிறார்ளோ, பிணைத்துக் கொள்கிறார்ளோ அவர்களது வாழ்க்கை ஈமானிய ஜோதியால் நிரப்பப்படும் என அருள்மறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ் சான்றுரைக்கின்றான்.
COMMENTS