எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் அல்லாஹ் படைத்த படைப்புகளிலேயே மிகச் சிறப்பானவர்களும் மிக மிக அழகானவர்களுமாகும். அவர்களைவிட மிக அழ...
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் அல்லாஹ் படைத்த படைப்புகளிலேயே மிகச் சிறப்பானவர்களும் மிக மிக அழகானவர்களுமாகும். அவர்களைவிட மிக அழகான எந்த ஒரு படைப்பையும் யாராலும் பார்த்து விட முடியாது. அவர்களின் சிறப்புக்களும், மகிமைகளும் ஏராளம் ஏராளம். அவை அனைத்தையும் இவ்விடத்தில் கூறி முடிக்க முடியாது என்றாலும் ஒரு சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் நடுநிலையான உயரம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகள் சமமாகவே இருந்தன. மாறாக முன் தள்ளப்பட்டதாக இருக்கவில்லை. அவர்களுடைய முகம் சிவப்புக் கலந்த வெண்மை நிறம் கொண்டதாகவும் இரு கன்னங்களின் சிவப்பு நிறம் பனிக்கட்டியின் மீதுள்ள சிவப்பு ரோஜாவை விட மிக அழகானதாகவும் காட்சியளிக்கும். இமாம் இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னது போன்று எம்பெருமானார் முஹம்மத் ﷺ அவர்களின் முகத்தின் பிரகாசம் அவர்களது முகத்திலே சூரியனும், சந்திரனும் இருப்பது போன்று காட்சிதரும். அவர்களது இரு கண் புருவங்களும் இரு பிறைகள் போன்று மெல்லியதாக காட்சியளிக்கும். அவ்விரு புருவங்களும் ஒன்றுக்கொன்று சேராது நெருக்கமாக இருக்கும். மேலும் அவர்களுடைய பற்கள் அழகிய அமைப்பில் இடைவெளிகளை கொண்டதாக காணப்படும்.
எங்கள் தலைவர் முஹம்மத் ﷺ அவர்கள் பேசினார் அவர்களின் சங்கையான வாயிலிருந்து பிரகாசம் வெளிப்படும். அவர்களுடைய மூக்குப் பகுதி நடுத்தரமாகவும் கொஞ்சம் உயர்ந்ததாகவும் இருக்கும். மேலும் எம்பெருமானார் ﷺ அவர்களின் கண் இமை உரோமங்கள் நீளமாகவும், அடர்த்தியாகவும் அவர்களது அழகுக்கு மெருகூட்டியதுடன் அவர்களது இரு கண்களும் அழகு தரும் அமைப்பில் விசாலமானதாகவும் காட்சிதரும். அவர்களின் கண்களின் அழகை அதிகப் படுத்தும் விதத்தில் இரு கண்களிலும் சிவப்புக் கோடுகள் இருக்கும். மேலும் அவர்களுடைய தாடி அடர்த்தியாக அழகு தரும். மேலும் அவர்களுடைய தலை முடிகள் கடும் கறுப்பு நிறம் கொண்டதாகவும் நெற்றிப் பகுதி முடிகளால் மறைக்கப்படாமல் தெளிவாக காட்சியளிக்கும்.
அவர்களுடைய முபாரக்கான தலை அடர்த்தியான முடிகள் கொண்டதாகவும் அலைகள் போன்று அடுக்கடுக்காகவும் காணப்படும். அவர்கள் சிலவேளை அவர்களது தலைமுடியை காதின் நுனிப்பகுதி வரையும் இன்னும் சிலவேளை இரு தோள் புஜம் வரையும் வளர விடுவார்கள். அவர்களது தலை முடிகளில் கிட்டத்தட்ட 20 முடிகளே நரைத்திருந்தது. அவர்கள் நடந்து செல்லும்போது அதிகமாக திரும்பிப் பார்க்காமல் தனது நடையில் உன்னிப்பாக இருப்பார்கள். பின்னால் திரும்ப வேண்டிய சந்தர்ப்பங்களில் முழுமையாகவே திரும்புவார்கள். அவர்களுடைய இரு தோல் புஜங்களும் மத்தியிலுள்ள பகுதிகள் அவர்களது பலத்தையும், கம்பீரத்தையும் வெளிப்படுத்தக்கூடிய அமைப்பில் விசாலமாக இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் நறுமணங்களை உபயோகிக்காமலே அவர்களிடமிருந்து கஸ்தூரியை விட பன்மடங்கு வாசனை தரும் நறுமணம் வீசும். அவர்களது நெற்றியில் விலையும் வியர்வைத்துளிகள் முத்துக்களைப் போன்று இலங்கும். முஹம்மத் ﷺ அவர்களின் நற்குணத்தைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது "நபியும் அல்லாஹ் அவர்களே நிச்சயமாக நீங்கள் மாபெரும் நற்குணங்களைக் கொண்டவராக இருக்கின்றீர்கள்." இன்னும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் முஹம்மத் ﷺ அவர்களுடைய நற்குணத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது " அவர்களின் நற்குணம் அல்குர்ஆனாகவே இருந்தது" எனக் கூறினார்கள்.
எப்போதும் அவர்களுடைய தனிப்பட்ட விடயத்திற்காக கோபிக்கவோ, பழிக்குப் பழி தீர்க்கவும் மாட்டார்கள். மாறாக அல்லாஹ்வின் கண்ணியங்கள் இழிவாக்கப்படும் போதுதான் தேசம் கொள்வார்கள். மேலும் தனது தோழர்களை ஆறுதல்படுத்தி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் நகைச்சுவை செய்வார்கள். நகைச்சுவை செய்யும்போது உண்மையே பேசுவார்கள். ஏனெனில் அவர்கள் பொய் பேசுவதை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். கொடை கொடுத்தல், பற்றற்ற வாழ்க்கை, மற்றும் பணிவு போன்ற அதிசிறந்த பண்புகளில் எம்பெருமான் முஹம்மத் ﷺ அவர்களே முதன்மையானவர்களாக காணப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் உண்மை பேசுதல், நம்பிக்கை, நாணயம், நேர்மை, பிறரோடு சேர்ந்து நடத்தல், பத்தினித்தனம், விட்டுக் கொடுப்பு, பொறுமை, எல்லா நொடிப் பொழுதிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல், உபதேசம் புரிதல், பிறருக்கு அன்பு காட்டுதல், உபகாரம் செய்தல், ஏழைகள், அனாதைகள், விதவைகள் மற்றும் பலகீனமானோர் ஆகியோர் ஆதரித்தல் போன்ற தலைசிறந்த நற்பண்புகள் அனைத்தையும் கொண்டவராக இருந்தார்கள்.
நபிகளார் முஹம்மத் ﷺ அவர்கள் ஏழைகளை நேசிப்பவர்களாகவும், நோயாளிகளிடம் சென்று நோய் விசாரிப்பவர்களாகவும், ஜனாசாக்களில் கலந்துகொள்பவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறான இன்னும் பல சிறப்பியல்புகளையும், நற்பண்புகளையும் கொண்டவராகவே எம் தலைவர் முஹம்மத் ﷺ அவர்கள் வாழ்ந்தார்கள்.
COMMENTS