நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற மிக அழகான, இந்த உலகம், அன்புக்காக ஏங்கித் தவிக்கிறது. அன்பு செய்கின்ற மனிதர்களாலே, இவ்வுலகம் அழகானதாக உரு...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற மிக அழகான, இந்த உலகம், அன்புக்காக ஏங்கித் தவிக்கிறது.
அன்பு செய்கின்ற மனிதர்களாலே, இவ்வுலகம் அழகானதாக உருமாறி நிற்கிறது.
அன்பு மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருக்கிறது. அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவேயில்லை.
எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு இரக்க குணம் மேலோங்கி இருக்கும்..
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சுப் பழங்களை வாங்குவார்.
பழங்களை எடை போட்டு வாங்கிப் பணம் கொடுத்த பின் அந்தப் பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து அங்கேயே சாப்பிடுவார்.
''என்ன பாட்டி, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது'' என்று சொல்லி, அந்தப் பாட்டியிடம் ஒரு பழத்தைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்..
உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா ,
நல்லாத் தானே இருக்கு” என்பார்.
உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அவர் மனைவி ஒரு நாள் தன் கணவரிடம்,
'ஏங்க..பழங்கள் நல்லா இனிப்பாகத் தானே இருக்கு. ஏன் தினமும் இப்படி நல்லா இல்லைனு பொய் சொல்லி நாடகம் போடுகிறீர்கள் என்று கேட்டார். ”
அந்த இளைஞர் சிரித்து கொண்டு தன் மனைவியிடம்,“அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களைத் தான் விற்கிறாங்க..
ஆனாலும் தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க. நான் இப்படிக் குறை கூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்.”
தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து வந்தார்
அவர் அந்தப் பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்.''. இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாகப் போட்டுப் பழங்களைக் கொடுக்கிறாய்..?.”
உடனே அந்தப் பாட்டி புன்னகை ஒன்றை பூத்து விட்டு,
அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படிக் குறை கூறுவது போலக் கூறிக் கொடுத்து சாப்பிட வைக்கிறான்.
இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான். நான் எடை அதிகமாக பழங்களைப் போடுவதில்லை...
மாறாக, அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது என்றார் அன்போடு.
இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது...
ஆம்.,நண்பர்களே..
அன்பை விதைப்போம்... ஆனந்தத்தை அறுவடை செய்வோம்..
முடியவில்லையென்றால்,
அனுதாபத்தையாவது அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம். அப்படியில்லாமல், வெறுப்பை மட்டுமே அறுவடை செய்யும் நிலை ஏற்படுமானால், நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று அர்த்தம்.