எல்லாம் வல்ல இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பாக இருந்த விடயங்களிலிருந்து மறு உலகில் நடக...
எல்லாம் வல்ல இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பாக இருந்த விடயங்களிலிருந்து மறு உலகில் நடக்கக்கூடிய சுவர்க்கம், நரகம் வரைக்கும் அனைத்தையுமே இந்த சமூக மக்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டார்கள். இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் பல கிரந்தங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் அவைகள் அனைத்தையும் எம்மால் முடிந்த அளவுக்கு படித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதனடிப்படையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒரு மனிதனுடைய வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை அவர்கள் வாழக்கூடிய காலகட்டத்திலேயே இந்தச் சமூகத்திற்கு சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள்.
ஒரு மனிதனுடைய வாழ்வில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நிறைய விடயங்களை எச்சரித்திருக்கிறார்கள். அதிலும் மிக முக்கியமாக பிறருக்குச் சொந்தமான பொருட்களை, நிலங்களை அபகரிப்பதை கடுமையாக எச்சரித்தார்.
அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- எனக்கும் சிலருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நான் ஆஷா (ரழி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் அபூ ஸலமாவே நிலத்தை எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசையை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "யார் அடுத்தவருடைய நிலத்தில் அநியாயமாக ஒரு ஜான் அளவு அபகரித்துக் கொள்கிறாரோ அவருடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி மறுமைநாளில் வலையாக மாட்டப்படும்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்:- புஹாரி - 3195)
எனவே நமக்குச் சொந்தமில்லாத அடுத்தவர்களுடைய நிலத்தை, பொருளை அபகரிப்பவர்களுக்கு மறுமையில் இதுதான் தண்டனை என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லிக் காட்டினார்கள்.