உலகத்தையே மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஈட்டியுள்ள கொரோனா வைரஸ் குறித்து நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அதற்கான அழகியத் தீர்வு முறையை வகுத்துத...
உலகத்தையே மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஈட்டியுள்ள கொரோனா வைரஸ் குறித்து நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அதற்கான அழகியத் தீர்வு முறையை வகுத்துத் தந்துள்ளார்கள்.
அருமை இஸ்லாமியச் சகோதரர்களே!
சீனாவில் புர்கா அணிவதையே, இஸ்லாம் பரவுவதையோ அவர்கள் விரும்பவில்லை. அதனால் தான் அல்லாஹ் இப்படிப்பட்ட சோதனையை தந்திருக்கிறான் என்றெல்லாம் முகநூலிலும் ஏனைய சமூக வலைத்தளத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இதனைக் கற்றுத் தரவில்லை.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நோயில் இருக்கக் கூடியவர்களுக்கு நாம் அதிக அதிகமாக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றே கற்றுத் தந்தார்கள். அழகிய உபதேசத்தைக் கொண்டு நீங்கள் அவர்களிடம் இந்த மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருக்குர்ஆனிலே கூறுகிறான். ஆகவே சீனா மக்களுக்காகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்காகவும் நாம் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் துஆப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். காரணம் உங்கள் யாவரையும் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தேன். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் சகோதரர்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
எனவே நம் தொப்புள்க் கொடி உறவுகளுக்கு அது சீன மக்களாக இருக்கட்டும், அல்லது வேறு நாட்டுக்காரர்களாக இருக்கட்டும் அது யாராக இருந்தாலும் இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து பாதுகாப்புப் பெற நாம் அதிக அதிகமாக துஆ செய்து கொள்ள வேண்டும். ஆகவே அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள் பரிவானாக. ஆமீன்.....
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்ன செய்தி; ஹதீஸ்களை பதிவு செய்திருக்கக்கூடிய திர்மிதி, அபூதாவூத், புஹாரி போன்ற நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. "அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள், எந்த நோயையும் அல்லாஹ் அதற்குரிய மருந்து இல்லாமல் இறக்கவில்லை" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். ஆக இந்த நபிமொழித் தொகுப்பை பார்க்கும் போது இந்தக் கொரோனா வைரஸ் நோய்க்கும் நிச்சயம் மருந்து உண்டு என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
மேலும் புஹாரி என்கின்ற ஹதீஸ் கிரந்தத்தில் (5279) ஹதீஸாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்:- அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்; "ஒரு ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்களாக செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அந்த ஊரில் ஓர் கொள்ளை நோய் ஏற்பட்டால் அந்த ஊரில் இருந்து நீங்கள் வெளியேராதீர்கள் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
மருத்துவர்கள் சொல்லக்கூடிய விடயம்; இந்த நோய்களுக்கு மிக முக்கிய காரணியாக அமைவது சுத்தம் இல்லாமை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். நஸஈ, அஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது; "பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும், இறைவனின் திருப்தியை பெற்றுத்தரும்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
மேலும் முஸ்லிம் என்கின்ற நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். "சாபாத்திற்குரிய இரு செயல்களை தடுத்து விடுங்கள்." எனக் கூறியபொழுது சஹாபிகள் "அல்லாஹ்வின் தூதரே சாபத்திற்குரிய அந்த இரண்டு செயல்களும் என்ன?" என்று கேட்டபொழுது, அதற்கு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "மக்களின் நடைபாதையில் அல்லது மக்கள் ஓய்வெடுக்கும் நிழலில் நீங்கள் மலம் கழிக்காதீர்கள். அது முற்றிலும் சாபத்திற்குரிய செயல் ஆகும்." எனக் கூறினார்கள்.
எனவே தூய்மை, சுத்தம் என்பது இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய ஒன்றாகும். சுத்தம் ஈமானில் அரைவாசி என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். ஆகவே இன்றைய அனைத்து நோய்களுக்கும், கொரோனா போன்ற வைரஸ் நோய்களுக்கும் தூய்மை இல்லாதமையே காரணம் என்று மருத்துவர்களும் இன்று கூறுகின்றார்கள்.
எனவே தூதர் வளி ஏற்போம்,
சுத்தத்தைப் பேணுவோம்,
சுகாதாரத்தை வளர்ப்போம், ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.