இந்த உலகத்தில் தோன்றிய அத்தனை நபிமார்களும் தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள். அதே நேரத்தில் எங்கள் தலைவரான முஹம்மதுர் ரசூலுல்ல...
இந்த உலகத்தில் தோன்றிய அத்தனை நபிமார்களும் தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள். அதே நேரத்தில் எங்கள் தலைவரான முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களும் இந்த தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள். மேலும் அவனுடைய தீண்டுதலில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஐந்து நேரத் தொழுகைக்குப் பின்னாலும் துஆ பிரார்த்தனை செய்யும்படியும் ஏவி உள்ளார்கள். எனவே இந்த தஜ்ஜாலினுடைய அட்டகாசங்கள் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
அந்த தஜ்ஜாலிடைய உருவ அமைப்பைப் பற்றியும், அவன் எப்படி இருப்பான் என்பதைப் பற்றியும், அவனுக்கு அல்லாஹ் என்னென்ன அதிசயத்தை நிகழ்த்த ஆற்றலைக் கொடுத்திருக்கிறான் என்பதைப் பற்றியும், அவனுடைய நெற்றியில் எழுதப்பட்ட சொற்களைப் பற்றியும், தஜ்ஜால் இவ்வுலகிற்கு வெளியான பிறகு உலக மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியும் பல்வேறு விடயங்களை எமது நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
ஆக இவைகளைப் போன்று அந்த தஜ்ஜால் எங்கு, எந்த திசையில் இருந்து வருவான் என்பதைப் பற்றியும் நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள். "தஜ்ஜால் சிரியாவிற்கு ஈராக்கிற்கும் இடையே வெளிப்பட்டு வலது புறமும், இடது புறமும் விரைந்து செல்வான்" என்று சொல்லிவிட்டு "அல்லாஹ்வின் அடியார்களே உறுதியாக நில்லுங்கள்" என்பதாக நபி ﷺ அவர்கள் சொன்னார்கள்.
(ஆதாரம்:- முஸ்லிம் - 5,228)
மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இப்படி ஒரு முறை சொல்லிக் காட்டினார்கள். "மேற்கில் உள்ள குரஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான்" என்பதாகச் சொன்னார்கள்.
(ஆதாரம்:- திர்மிதி - 2,163)
குரஸான் என்பது ஆப்கானிஸ்தானின் ஒட்டியுள்ள ஓர் மலைப்பகுதியாகும்.
தஜ்ஜால் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவான் என்பதை இந்த நபிமொழித் தொகுப்புகளில் இருந்து நாம் அறியலாம்.
தஜ்ஜாலின் அட்டகாசங்களலில் இருந்து நம் அத்தனை பேர்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்...