அல்லாஹ் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமாக பல வழிகள் மூலம் சோதனைகளையும், கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறான். அதே நேரத்தில் தன்னைய...
அல்லாஹ் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமாக பல வழிகள் மூலம் சோதனைகளையும், கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறான். அதே நேரத்தில் தன்னையும் தனது ரசூலையும் ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹுத்தஆலா பல விதமான சோதனைகளை ஏற்படுத்துகிறான். எனவே இப்படிப்பட்ட சோதனைகளையும், கஷ்டங்களையும் எவ்வாறு ஒரு முஸ்லிம் எதிர்கொள்வது என்பதையும் புண்ணிய மார்க்கமான இஸ்லாம் வழி வகுத்துத் தந்துள்ளது.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவரைச் சோதனைக்கு உட்படுத்துகிறான்."
(ஆதாரம்:- புஹாரி - 5645)
எனவே இந்த உலகத்தில் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை, நலவை நாடுகிறான் என்றால் அம் மனிதனுக்கு அல்லாஹுத்தஆலா சோதனையைக் கொடுக்கிறான்.
மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "ஒரு முஸ்லிமைத் தீண்டக் கூடிய முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை."
(ஆதாரம்:- புகாரி - 5642)
இந்த உலகத்தில் அல்லாஹ் ஏன் ஒரு மனிதனை சோதிக்கிறான் என்ற கேள்விக்கு இந்த நபி மொழியானது ஒரு சரியான தீர்வை விளக்குகிறது. அல்லாஹ் ஒரு அடியானை எந்த அளவு நேசிக்கிறானோ அந்த அளவு அந்த மனிதனுக்கு சோதனைகளை ஏற்படுத்துவான்.
அல்லாஹ்வினுடைய இந்தச் சோதனைகளால் எத்தனையோ பெரும்பெரும் சஹாபாக்கள் எல்லாம் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். சத்திய மார்க்கமான இஸ்லாத்தை எடுத்த ஒரே காரணத்திற்காக அவர்களை சுடுமணலில் நிர்வாணமாக போடப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டார்கள். இதுபோக உலகிற்கே அருட்கொடையாக திகழ்ந்த அருமை நாயகம் ﷺ அவர்களுக்கு நிகழ்ந்ததை விடவா!!!?.
01) சத்தியத்தை எடுத்துரைத்த பொழுது தன்னுடைய குடும்பமே தனக்கெதிராக திரும்பியதே!.
02) தன்னுடைய குடும்பமே தன்னை கொலை செய்ய நேரம் வரும் என சரியான நேரத்திற்காக காத்திருந்தார்களே!.
03) தொழுகையில் சுஜூதின் போது ஒட்டகத்தின் அவிந்த குடல்களை அவர்களுடைய கழுத்திலே போடப்பட்டதே!.
04) தன்னையும் தன்னை ஏற்றுக் கொண்டோரையும் பசி, பட்டினியோடு பள்ளத்தாக்கில் மக்கா சமூகம் ஒதுக்கியதே!.
05) தாயிப் நகரத்தில் தன்னுடைய மேனியில் இரத்தம் ஓடுகின்ற வரைக்கும் கற்களால் அடிக்கப்பட்டார்களே!.
06) உணவின்றி பசியினால் தன்னுடைய வயிற்றில் கற்களைக் கட்டிக்கொண்டு சத்திய மார்க்கத்தை நிலைநிறுத்தப் போராடினார்களே!.
இப்படி பெருமானார் ﷺ அவர்களுக்குத் திகழ்ந்த சோதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் இத்தனையும் நபியே! நீங்கள் கூறுங்கள். இந்த உஹது மலையைக் கூட தங்கமாக உங்களுக்கு மாற்றித் தர நாங்கள் தயார் என்று இறைவனால் அருளப்பட்ட உத்தம நபி ﷺ அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த சோதனைகள்.
இப்படி எல்லாம் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். காரணம் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக. எனவே நீங்கள் மனம் தளர்ந்தும் விடாதீர்கள், நம்பிக்கை இழந்தும் விடாதீர்கள் என்று அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
எனவே அன்பிற்கினிய இஸ்லாமிய நெஞ்சங்களே! தொழுகையைக் கொண்டும், அந்த தொழுகையில் துஆ செய்துவது கொண்டும் அல்லாஹ்விடத்தில் உதவிக் கரங்களை நாடுவோம். அல்லாஹ் நமக்கு அளித்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வோம். மேலும் அல்லாஹ் துஆக்களை கபூல் செய்யக்கூடிய தஹஜ்ஜத் நேரத்தில் எலும்புவோம். புனிதமான அந்தத் தொழுகையை தொழுதுவிட்டு இறைவனிடத்தில் கையேந்துவோம்.
யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் நீயே பாதுகாவலன். மேலும் எங்களுடைய அனைத்துத் துஆக்களையும் கபூல் செய்து கொள்வாயாக.
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS