மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தற்கால உலகின் நியதிப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவன் பணத்தை சம்பாதித்தே ஆகவேண்டும். அதேபோன்ற...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தற்கால உலகின் நியதிப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவன் பணத்தை சம்பாதித்தே ஆகவேண்டும். அதேபோன்று ஒவ்வொரு மனிதனும் மறு வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் மறு உலகத்திற்காகவும் நன்மைகளை சம்பாதித்தே ஆகவேண்டும்.
ஆக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நன்மைகளைச் சம்பாதித்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் காட்டித் தந்துள்ளார்கள். அதனடிப்படையில் ஒரே நாளில் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதித்துக் கொள்ள அருமையான திக்ர் ஒன்றைக் காட்டித் தந்துள்ளார்கள். அவை என்ன என்பதை நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆராயலாம்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரழி) கூறியதாவது; நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் 'எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) எவ்வாறு ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்?' என்று கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "ஒருவர் (ஒவ்வொரு நாளும்) நூறுமுறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று கூறித் துதிக்க அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. மேலும் அவர் செய்த ஆயிரம் பாவங்கள் அவரை விட்டும் துடைக்கப்படுகின்றன" என்று கூறினார்கள்.எனவே ஒரு மனிதன் சுப்ஹானல்லாஹ் என்று நூறுமுறை சொல்வதற்கு கிட்டத்தட்ட 5 நிமிடம் கூட தேவைப்படாது. ஆனாலும் இந்த திக்ரை நாம் ஒவ்வொரு நாளும் நூறு தடவை ஓதி வருவதன் மூலம் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதோடு ஆயிரம் பாவங்களையும் துடைத் தெரிகின்றது.
(ஆதாரம்:- முஸ்லிம் - 5230)
எனவே நம்முடைய வாழ்க்கையில் இந்த அமலை தொடர்ச்சியாகக் கடைபிடிப்போம். அதிகமதிகம் நன்மைகளைக் கொள்ளையடித்துக்கொள்வோம். அதேபோன்று மறு உலக வெற்றிக்காக தயாராகுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் அருள் பாலிப்பானாக!.
ஆமீன்... ஆமீன்... யாரப்பல் ஆலமீன்...