தூய்மை இன்றி அமையாது உலகு. ஆம் இன்று தூய்மை, சுத்தம் இல்லாமை காரணமாக பல நோய்கள் உலகத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நோய்களி...
தூய்மை இன்றி அமையாது உலகு. ஆம் இன்று தூய்மை, சுத்தம் இல்லாமை காரணமாக பல நோய்கள் உலகத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நோய்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள இன்றைய நவீன விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் நீங்கள் வெளியில் சென்று வந்தால் முதலில் உங்கள் கை, கால், முகங்களை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அதாவது ஒட்டுமொத்தமாக சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
இதைத்தான் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே போதித்தார்கள். சுத்தத்தின் அடிப்படையிலேயே இஸ்லாமிய மார்க்கம் அமைந்துள்ளது என்பதையும் நிரூபித்துக் காட்டினார்கள்.
ஆக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தூய்மையை எவ்வாறு வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
🔷️ "தூய்மை ஈமானில் பாதியாகும்."
(ஆதாரம்:- முஸ்லிம் - 381)
🔷️ "தூய்மையின்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது."
(ஆதாரம் முஸ்லிம் - 382)
🔷️ "தூய்மையே தொழுகையின் திறவுகோல் ஆகும்."
(ஆதாரம் திர்மிதி - 03)
ஆக ஒவ்வொரு மனிதனும் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விடத்தில் அவனுடைய ஈமானின் படித்தரத்தை வைத்தே ஏற்றத்தாழ்வு படுத்தப் படுகிறான். அப்படிப்பட்ட ஈமானின் அரைவாசி சுத்தம் தான் என்கிறார்கள் அருமை நாயகம் ﷺ அவர்கள்.
அதேபோன்று பருவ வயதை எட்டிய ஒவ்வொரு முஸ்லிமான மனிதனும் கட்டாயமாக ஐந்து நேரம் தொழுதேதான் ஆகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தொழுகைக் கூட தூய்மையின்று ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனென்றால் தூய்மையானது தொழுகையின் திறவுகோல் என்று வலியுறுத்துகிறார்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்.
அதாவது தொழுவதற்கு முன்னால் இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரைக் கழுவியதன் பின்னர், வாய்க்குள் தண்ணீர் செலுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும், மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கை சுத்தம் செய்ய வேண்டும், முகத்தைக் கழுவ வேண்டும், பின்னர் இரண்டு கைகளையும் முழங்கை உட்படக் கழுவ வேண்டும், காது தலை போன்றவற்றை தண்ணீரால் தடவ வேண்டும், பின்பு இரண்டு கால்களையும் கழுவ வேண்டும். என்பதாக இறைத்தூதர் ﷺ அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இதேபோன்று ஒரு மனிதனுடைய மிக முக்கிய அன்றாடத் தேவைகளில் ஒன்றான மலசலம் கழிப்பதின் ஒழுங்குகளைப் பற்றியும் சொல்லித் தந்துள்ளார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "சிறுநீர் கழிக்கும் பொழுது பிறப்புறுப்பை வலது கரத்தால் தொடாதீர்கள்."
(ஆதாரம்:- புஹாரி - 154)
ஆக ஒரு மனிதனின் காலையில் எழுந்தது முதல் அவன் இரவில் உறங்கும் வரைக்கும் அவனுடைய சகல விடயங்கள் பற்றியும் அதன் ஒழுக்கங்களைப் பற்றியும் இந்தச் சமூகத்திற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
ஒரு நபித்தோழர் கூறியதாவது; "வானத்தில் ஒரு பறவை தன் இறக்கைகளை அசைத்தாலும் அவ்விடயத்தில் ஏதேனும் கல்வியை எமக்குப் போதிக்காமல் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் எங்களை விட்டுச் செல்லவில்லை" என்கிறார்கள்.
(ஆதாரம்:- அஹ்மத் - 21,399)
அதாவது வானத்தில் ஒரு பறவைப் பறந்தால்க் கூட அது ஏன் பறக்கிறது என்பதனை விளக்கமாகச் சொல்லக்கூடிய கல்வியாளராக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இருந்தார்கள் என்றால் அவர் வாழ்க்கைப் போதனைகளில் எப்படி இருந்திருப்பார் என்பதை நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
ஆகவே நோய்களுக்குச் சுத்தத்தின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்தவர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்.
நபிவழி நடப்போம்,
சுத்தத்தைப் பேணுவோம்,
ஆரோக்கியமாக இருப்போம்.