அல்லாஹுத்தஆலா இந்த உலகத்தில் மனிதர்களுக்கு நிறைய சோதனைகளைத் தருகிறான். சோதனைகள் இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வுடைய சுன்னத் அதாவது வழிமுறையாக...
அல்லாஹுத்தஆலா இந்த உலகத்தில் மனிதர்களுக்கு நிறைய சோதனைகளைத் தருகிறான். சோதனைகள் இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வுடைய சுன்னத் அதாவது வழிமுறையாகும். அதனடிப்படையிலேயே அல்லாஹ்வால் தரப்பட்ட ஒரு சோதனைதான் (கோபவித்19) என்று சொல்லக்கூடிய கொரோனா வைரஸ் ஆகும்.
இந்த சோதனையில் நாம் பொறுமையாக இருக்கின்றோமா?, மார்க்கத்தில் உறுதியாக இருக்கின்றோமா?, எங்களுடைய ஈமானைப் பாதுகாத்துக் கொள்கின்றோமா என்பதை யெல்லாம் அல்லாஹுத்தஆலா சோதித்துப் பார்க்கின்றான்.
இந்த நேரங்களில் உண்மையாக முஃமீன்கள் தன்னுடைய ஈமானில் உறுதியாக நிற்பார்கள், வெற்றியடைந்தும் கொள்வார்கள். பலவீனமானவர்கள் அல்லது ஈமானிய சிந்தனையில் தெளிவில்லாதவர்கள் நிச்சயமாக இந்த சோதனைகளில் தோல்வியடைந்து விடுகின்றார்கள். இதனை நாம் அவ்வப்போது பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஆக இவைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க புதிதாக ஒரு புரளியை மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டுள்ளார்கள். அதுதான் கொரோனா என்கின்ற வார்த்தையோடு இவைகளைப் பற்றி யெல்லாம் அல்-குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்கின்ற புரளியாகும்.
சூரா புஸ்ஸிலத் (41வது அத்தியாயம்) 25ஆம் வசனத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்:-
وَقَيَّضْنَالَهُمْ قُرَنَآءَ
இதிலே இடம் பெற்றிருக்கக் கூடிய குரனா என்கின்ற வார்த்தையை வைத்துக்கொண்டு இது கொரோனா வைரஸைப் பற்றிச் சொல்லப்படுகிறது என்கின்ற ஒரு புரளியை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டுள்ளார்கள். எனவே இதுகுறித்து இந்த வசனத்தை தற்போது ஆராய்வோம்.
இதிலே குரானா என்கின்ற வார்த்தையானது கரீன் என்கின்ற அரபு வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். கரீன் என்றால் நண்பன், தோழன் என்கின்ற அர்த்தமாகும்.
இந்த வசனத்தின் மூலமாக இறை நிராகரிப்பாளர்களுக்கு சாட்டப்பட்ட நண்பர்களான, துணையாளர்களான ஷைத்தான் களைப்பற்றி அல்லாஹுத்தஆலா பேசுகின்றான். அதாவது அல்லாஹ் இவ்வசனத்தின் மூலமாக மிகத் தெளிவாகவே "அவர்களுக்கு நாம் மோசமான, தீய நண்பர்களைச் சாட்டினோம்" என்று கூறுகின்றான்.
எனவே இந்த குரனா என்ற சொல்லினுடைய அர்த்தம் காபிர்களுக்கும், இறை நிராகரிப்பாளர்களுக்கும் சாட்டப்பட்ட ஷைத்தான்களாகும். மாறாக அல்லாஹ் இவ்வசனத்தின் முலம் கொரோனா வைரஸ் பற்றி பேசுகின்றான் என்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாகும்.
ஆக அல்குர்ஆனுக்கு தெளிவான விளக்கம் தெரியாமல் பொய்யான, போலியான விளக்கங்களைக் கொடுப்பது மிகப்பெரிய பாவமாகும். சில நேரங்களில் இது இறை நிராகரிப்பாகவும் மாறிவிடும்.
எனவே இதுபோன்ற பொய்யான போலியான விளக்கங்களிலிருந்து விடுபட்டு ஆலிம்கள் இடத்தில் சென்று சரியான விளக்கங்களை பெற்றுக்கொள்வோம்.
அல்லாஹுத்தஆலா எங்கள் அனைவருடைய ஈமானையும் பலப்படுத்துவானாக....
மற்றும் போலியான செய்திகளை விட்டும் எங்கள் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக......
ஆமீன்... ஆமீன்... யாரப்பல் ஆலமீன்...