உலகத்தில் இன்று பல நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இச் சூழலில் அந்தந்த நாடுகளில் பள்ளிக்கூடங்கள், அரச அலுவலகங்கள் ம...
உலகத்தில் இன்று பல நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இச் சூழலில் அந்தந்த நாடுகளில் பள்ளிக்கூடங்கள், அரச அலுவலகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை போன்ற மற்றும் சில நாடுகளில் உங்கள் தொழுகைகளைக் கூட உங்கள் வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. காரணம் தொற்று நோயாகும்.
ஆகவே இந்த நோய் குறித்து நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோன்று இந்தத் தொற்று (வைரஸ்) போன்ற நோய்கலுக் கெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பதாகவே உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாம் ஓர் அழகிய வாழ்க்கை நெறியை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது.
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் தீர்ப்பை உமர் (ரழி) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப் படித்திக் காட்டினார்கள்.
ஒரு முறை (ஷர்) என்கின்ற ஒரு நாட்டிற்கு (ஷாம்) நாட்டை நோக்கி உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் ஒரு பயணம் மேற்கொண்ட பொழுது (ஷார்க்) எனும் இடத்தை அடைந்த நேரத்தில் அந்த மாகாணத்தின் படைத்தளபதியாக இருந்த அபூ உபைதாஃ (ரழி) அவர்களும், அவர்களின் நண்பர்களும் உமர் (ரழி) அவர்களைச் சந்தித்து (ஷாம்) நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது எனத் தெரிவிக்கின்றார்கள்.
அதற்கு உமர் (ரழி) அவர்கள் (ஷாம்) நாட்டிலுள்ள முஹாஜிரீன்களை ((மக்காவை விட்டு ஹிஜ்ரத் செய்த சஹாபாக்கள்)) தன்னிடம் அழைத்துவரக் கட்டளையிட்டார்கள். அக்கட்டளைக்கமைய அங்குள்ள முஹாஜிரீன்கள் அனைவர்களும் உமர் (ரழி) அவர்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டார்கள். அப்பொழுது உமர் (ரழி) அவர்கள் "தான் (ஷாம்) நாட்டிற்கு உள்ளே செல்லலாமா?" என்று அந்த முஹாஜிரீன்களிடத்தில் ஆலோசனைக் கேட்டார்கள். எனவே உமர் (ரழி) அவர்களின் இந்த ஆலோசனைக்கு சில சஹாபாக்கள்; "(ஷாம்) நாட்டில் கொள்ளை நோய் பரவியிருப்தால் அங்கு நீங்கள் செல்ல வேண்டாம்" என்றும் சில சஹாபாக்கள்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எதுவும் எமக்கு அணுகாது. நீங்கள் (ஷாம்) நாட்டுக்குள் செல்லுங்கள்" என்றும் ஸஹாபாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின.
அப்பொழுது உமர் (ரழி) அவர்கள் "முஹாஜிரீன்களே! நீங்கள் செல்லுங்கள்" என்று அவர்களை அனுப்பிவிட்டு அங்குள்ள அன்சாரிகளை ((மதீனாவாசிகளை)) அழைத்துவரும்படி கட்டளையிட்டார்கள்.
அன்சாரிகள் அங்கே வந்த பொழுது முஹாஜிரீன்களிடத்தில் கேட்ட அதே கேள்வியை இவர்களிடமும் உமர் (ரழி) கேட்டார்கள். அதே நேரத்தில் அன்சாரிகளும் அவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை அடைந்தார்கள். ஒரு சாரார் (ஷாம்) தேசத்துக்கு வரும் படியும் மற்றொரு சாரார் வரவேண்டாம் என்றும் கூறினர்.
பின்பு உமர் (ரழி) அவர்கள் மதீனாவாசிகளையும் திருப்பி அனுப்பிவிட்டு அடுத்ததாக (ஷர்க்) மாகாணத்தில் உள்ள ஆரம்பகால பெரிய குறைஷி முஸ்லிம்களை ஆலோசனை கேட்பதற்காக வேண்டி அழைத்து வர கட்டளையிட்டார்கள்.
அவர்கள் உமர் (ரழி) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களிடத்தில் ஆலோசனைக் கேட்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரே கருத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை இருக்கவில்லை. "நீங்கள் உங்கள் மக்களுடன் மதீனாவிற்குத் திரும்பி விடுங்கள். மாறாக (ஷாம்) நாட்டிற்குள் செல்ல வேண்டாம்" என்று அனைத்து குறைஷி முஸ்லிம்களும் சொன்னார்கள்.
உடனே உமர் (ரழி) அவர்கள் குறைஷி முஸ்லிம்களை வளியனுப்பிவிட்டு தன்னுடைய தோழர்களைப் பார்து "நான் காலையில் எனது வாகனத்தில் மதீனாவிற்குப் புறப்படயிருக்கிறேன். நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்பொழுது அபூ உபைதஃ (ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் விதியிலிருந்து விரைந்தோடுவதற்காகவா ஊர் திரும்புகின்றீர்கள்" என்று கேட்க அதற்கு உமர் (ரழி) அவர்கள் "அபூ உபைதாஃவே இதை உங்களைத் தவிர வேறு எவரேனும் கேட்டிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே விரைந்தோடுகின்றோம். உங்களிடம் ஒரு ஒட்டகம் இருந்து அதை, ஒரு பக்கம் செழிப்பாகவும் மறுப்பக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், அந்த ஒட்டகத்தை செழிப்பான கரையில் மேய்த்தாலும், வறண்ட கரையில் மேய்த்தாலும் அதை நீங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் மேய்க்கின்றீர்கள் அல்லவா?" என்று பதிலளித்தார்கள்.
இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்ற அந்த நேரத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் அவ்விடத்திற்கு வந்து "இதுகுறித்து என்னிடத்திலே ஒரு விளக்கம் இருக்கிறது" என்று கூறினார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் சொன்னார்கள்; உமர் (ரழி) அவர்களே! அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "ஓர் ஊரில் கொள்ளை நோய் (வைரஸ்) பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊரிற்கு நீங்களாகவே செல்லாதீர்கள். உங்கள் ஊரில் கொள்ளை நோயிருந்தாள் உங்கள் ஊரை விட்டு மற்ற ஊருக்கு பயணம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள்.இவ்வாறு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் கூறியவுடன் உமர் (ரழி) அவர்கள் "அபூ உபைதாஃவே நான் என்ன முடிவு செய்திருந்தேன்?. மதீனாவிற்கு காலைப் பொழுதில் என்னுடைய நண்பர்களோடு புறப்படவிருந்தேன். தன் முடிவு நபி ﷺ அவர்களின் வழிகாட்டலுக்கு இணங்கவே அமைந்திடச் செய்ததற்காக வேண்டி அல்லாஹ்வை இந்த இடத்திலே நான் புகழ்ந்து திரும்புகிறேன்." என்று கூறினார்.
ஆகவே ஒரு இடத்தில் தொற்று நோய் (வைரஸ்) போன்ற நோய்கள் பரவுவதாக நமக்குத் தெரிந்தால் அந்த இடத்திலிருந்து ஏனைய இடத்திற்குச் செல்லக்கூடாது. இன்னுமொரு இடத்திலே அது இருப்பதாக நாம் கருதினால் அவ்விடத்திற்கு நாம் செல்லக்கூடாது. ஆகவே இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
இன்றைய அரச முன்னெச்சரிக்கை நடைபெறுவதற்கு முன்பு 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த உலகத்திற்கே பறை சாட்டினார்கள்.
ஆகவே ஒரு ஊரில் தொற்றுப் பரவுவதாக இருந்தால் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். காரணம் உங்களுடைய ஒட்டகம் ஒரு செழிப்பான ஒரு இடத்தில் மேய்வதாக இருந்தாலும், மேலும் ஒரு வறண்ட பூமியில் மேய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ்வுடைய நாட்டம் தான் என்று உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள் அல்லவா!. இப்படியாக நம்முடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ் எமக்கு விதித்ததுதான் நடந்துக்கும்.
ஆகவே நபிகள் நாயகம் ﷺ சொன்னது போன்று ஒரு ஊரிலேயே தொற்று நோய், வைரஸ், கிருமிகள் இருந்தால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள் என்பதை நாம் கவனத்தில் கொண்டு நாம் முழுவதுமாக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். இவைகள் எம்மை சுற்றி இருக்கின்ற மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டு செல்லும்.
ஆகவே இது போன்ற வழிமுறைகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பதாகவே கற்றுத் தந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் இது போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக் கொடுப்போம்.
இன்ஷா அல்லாஹ்...