இந்த உலகத்தில் அல்லாஹ் ஒவ்வொரு படைப்புக்கும் மற்றதை விட ஒரு தனித்துவமான சிறப்பை வைத்திருக்கிறான். அதனடிப்படையில் புனித ஜும்ஆ தொழுகையைக்...
இந்த உலகத்தில் அல்லாஹ் ஒவ்வொரு படைப்புக்கும் மற்றதை விட ஒரு தனித்துவமான சிறப்பை வைத்திருக்கிறான். அதனடிப்படையில் புனித ஜும்ஆ தொழுகையைக் கொண்ட வெள்ளிக்கிழமைத் தினத்தில் ஏனைய நாட்களை விட பல சிறப்புகளைக் கொண்டு அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.
அல்லாஹ் எவ்வாறு இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் சில நல்ல விடயங்களை செய்யுமாறு ஏவி இருக்கிறானோ அதேபோன்று சில விடயங்களை விட்டும் தவிர்ந்து நடக்கவும் கட்டளையிட்டுள்ளான். அதனடிப்படையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஜும்ஆ உடைய தினத்தில் ஒரு செயலை நீங்கள் பள்ளிவாயலில் செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார்கள். அது என்ன என்பதை நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆராயலாம்.
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "வெள்ளிக்கிழமை அன்று உங்களில் ஒருவர் தம் சகோதரர் அமர்ந்த இடத்தில் தாம் அமர்வதற்காக அவரை எழுப்பி விட்டு அங்கு அமர வேண்டாம். மாறாக (நகர்ந்து) இடம் அளியுங்கள் என்று கூறட்டும்".
(ஆதாரம்:- முஸ்லிம் - 4393)
ஆக ஒருவர் ஜும்மா தொழுகைக்காக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை அவ்விடத்திலிருந்து எழுப்பிவிட்டு நாம் அவ்விடத்தில் அமர்வதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த நீதியானது ஜும்ஆவுடைய நாளில் மாத்திரம் தானா!? என்று கேட்டாள் நிச்சயமாக இல்லை. இதற்கு ஆதாரமாக மற்றுமொரு நபிமொழித் தொகுப்பை ஆராயலாம்.
நாம் மேலே பார்த்த நபிமொழித் தொகுப்பில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் விசேடமாக வெள்ளிக்கிழமை தினத்தில் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இப்பொழுது பார்க்கும் நபிமொழித் தொகுப்பில் பொதுவாகக் கூறியுள்ளார்கள்.
ஜாபிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டு (மீண்டும்) திரும்பி வந்தால் அவரே அவ்விடத்திற்கு உரியவர் ஆவார்".
(ஆதாரம்:- முஸ்லிம் - 4394)
நாம் ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கின்றோம். அந்த இடத்திலிருந்து குர்ஆனை எடுப்பதற்காக எழுந்து சென்று மீண்டும் வரும் பொழுது அவ்விடத்தில் மற்றொருவர் அமர்ந்திருந்தால் அவரிடத்தில் தாழ்மையாக இந்த இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். இப்பொழுது குர்ஆனை எடுப்பதற்காக வேண்டி எழுந்து சென்றேன். நீங்கள் அடுத்த இடத்தில் அமருங்கள் என்று சொல்வது தவறு அல்ல.
ஆனால் நாம் வருவதற்கு முன்னாலேயே ஒருவர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவரை நாம் அந்த இடத்திலிருந்து எழுப்பி அங்கு நாம் அமர்வருவதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள்.