அல்லாஹ்வினால் அருளப்பட்ட புனித அல்-குர்ஆனிற்கு ஏராளமான சிறப்புகளும், அந்தஸ்துக்களும் குவிந்து காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு அ...
அல்லாஹ்வினால் அருளப்பட்ட புனித அல்-குர்ஆனிற்கு ஏராளமான சிறப்புகளும், அந்தஸ்துக்களும் குவிந்து காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், வசனத்திற்கும் வெவ்வேறுபட்ட பலவிதமான சிறப்புக்களும், மகிமைகளும் நிறைந்து காணப்படுகின்றன.
இதனடிப்படையில் இப்பொழுது நாம் 'அல்-ஹம்து' சூராவினுடைய சிறப்புகளை ஆதாரத்துடன் ஆராய உள்ளோம்.
🔶️ "அல்-குர்ஆனின் அன்னை (எனப்படும் 'ஸூராஹ் அல்-ஃபாத்திஹாவை') ஓதாமல் தொழுபவர்களின் தொழுகை குறையுள்ளதாகும். அத் தொழுகை நிறைவு பெறாது" என நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
🔶️ மேலும் அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்; "தொழுகையில் ஓதப்படும் 'அல்-ஃபாத்திஹா' அத்தியாயத்தினை எனக்கும் என் அடியானுக்கும் இடையே துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய இரண்டு பகுதிகளாக வகுத்துள்ளேன். என் அடியான் கேட்பது அவனுக்குக் கிடைக்கும்.
🔹️ அடியான் 'அல்-ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (சர்வ லோகத்தின் அரசனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொல்லும் பொழுது, இரட்சகனான அல்லாஹ் என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான்.
🔹️ மேலும் அடியான் 'அர்-ரஹ்மானிர் ரஹீம்' (அவன் அளவில்லா அருளாளன், நிகரில்லா அன்புடையோன்) என்று சொல்லும் பொழுது, என் அடியான் என்னைத் துதித்து விட்டான் என்று மிக்க மேலான அல்லாஹ் கூறுவான்.
🔹️ மேலும் அடியான் 'மாலிகி யவ்மித்தீன்' (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொல்லும் பொழுது, அல்லாஹ் என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று கூறுவான். (மேலும் சில அறிவிப்புகளில் என் அடியான் அவன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.)
🔹️ அடியான் மேலும் 'இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்' (உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம்) என்று சொல்லும் பொழுது, அல்லாஹ் இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியான் அவன் கேட்பது அவனுக்குக் கிடைக்கும் என்று கூறுவான்.
🔹️ மேலும் அடியான் 'இஹ்தினஸ் சிராத்தல் முஸ்தகீம். சிராதல்லதீன அன்அம்த அலைஹிம் ஃகைரிள் மஃக்ழூபி அலைஹிம் வலழ் லாள்ளீன்' (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. மேலும் அவ்வழியானது உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழியாகும். உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்களின் வழியும் அல்ல. வழி தவறியவர்களின் வழியும் அல்ல) என்று சொல்லும் பொழுது, அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியான் கேட்பது அவனுக்குக் கிடைக்கும் என்று கூறுவான்.
🔺️ அறிவிப்பவர்:- அபூஹுரைரா ரழி
🔺️ ஆதாரம்:- முஸ்லிம் - 655
எனவே புனித அல் குர்ஆனை அதிகமாக ஓதிக் கொள்வோம். அதனை ஓதுவதன் மூலம் அல்லாஹ் எமக்குக் கொடுக்கக்கூடிய அனைத்துப் பாக்கியங்களையும் நாம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்போமாக...!!!
இன்ஷா அல்லாஹ்...!