நாம் செய்யும் அனைத்து அமற்களும் அல்லாஹ்வினுடைய ரஹ்மத்தைக் கொண்டு அதன் மூலம் எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றது. அல்லாஹ்வின...
நாம் செய்யும் அனைத்து அமற்களும் அல்லாஹ்வினுடைய ரஹ்மத்தைக் கொண்டு அதன் மூலம் எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
அல்லாஹ்வின் களாமானான திருக்குர்ஆனின் அடிப்படையிலும், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்க்கை வழி முறைகளிலும் நாம் வாழும் பொழுது நிச்சயமாக அல்லாஹ் நாளை மறுமை நாளில் சுவர்க்கத்தை எமக்குப் பரிசளிப்பதில் சந்தேகமில்லை.
இதனடிப்படையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சுவர்க்கம் நுழைவதற்கு நான்கு எளிய வழிமுறைகளைச் சொல்லிக் காட்டியுள்ளார்கள். அவைகளைக் குறித்துத்தான் இப்பொழுது நாம் பார்க்க உள்ளோம்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (ஒரு நாள்) நபிகள் நாயகம் ﷺ அவர்கள் (எங்களிடம்) "உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருப்பவர்?" என்று கேட்டார்கள். (அதற்கு) அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் "நான்" என்றார்கள். (பின்பு) "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். (அதற்கும்) அபூபக்கர் சித்தீக் (ரழி) "நான்" என்றார்கள். (பின்பு) "உங்களில் இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?" என்று கேட்க, (அதற்கும்) அபூபக்கர் சித்தீக் (ரழி) "நான்" என்றார்கள். (மேலும்) "உங்களில் இன்று ஒரு நோயாளியின் உடல் நலம் விசாரித்தவர் யார்?" என்று கேட்க, (அதற்கும்) அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் "நான்" என்றார்கள். (அப்போது) நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "யார் (நான்கு நல்லறங்களான) இவைகள் அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள்.மேற்கண்ட நபிமொழிப் பிரகாரம் ஒரு மனிதன் சுவர்க்கம் நுழைய இந்த நான்கு நல்லறங்கலையும் அவனது வாழ்வில் தினசரி எடுத்து நடக்கும் பொழுது நிச்சயம் அவனுக்கு அல்லாஹ் அவனது ரஹ்மத்தைக் கொண்டு சுவர்க்கத்தை வழங்குவான்.
(முஸ்லிம்:- 1,865)
🔴 நான்கு நல்லறங்கள்
1️⃣ தினசரி நோன்பு நோற்றல்
2️⃣ ஜனாசாவைப் பின் தொடர்ந்து செல்லுதல்.
3️⃣ ஏழைகளுக்கு உணவளித்தல்
4️⃣ நோயாளியை உடல் நலம் விசாரித்தல்
எனவே இந்த நான்கு நல்லறங்களையும் எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்தருள்வாயாக...!
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!