அல்லாஹ்வினுடைய புனித (கலாம்) பேச்சு, திருக்குர்ஆன் ஆகும். இப்படிப்பட்ட புனிதமான இந்த அல்குர்ஆனை ஓதுவதன் மூலமாக என்னென்ன நன்மைகளை எல்லாம் ...
அல்லாஹ்வினுடைய புனித (கலாம்) பேச்சு, திருக்குர்ஆன் ஆகும். இப்படிப்பட்ட புனிதமான இந்த அல்குர்ஆனை ஓதுவதன் மூலமாக என்னென்ன நன்மைகளை எல்லாம் அல்லாஹ் அள்ளித் தருகின்றான் என்பதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்ன செய்திகளிலிருந்து ஆராய்வோம்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள்.
(முஸ்லிம்:- 5,181)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
(புஹாரி:- 5,027)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்க வானவர்களுடன் இருப்பார்கள். மேலும் அல்குர்ஆனை (மனனம் செய்திடா விட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதுகின்றவர்களுக்கு இருமடங்கு நன்மைகள் உண்டு.
(புஹாரி:- 1,462 / முஸ்லிம்:- 4,937)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். மேலும் இரு ஒளிச்சுடர்களான "ஸூரஹ் அல்-பகரஹ்" மற்றும் "ஸூரஹ் ஆல இம்ரான்" ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவருக்காக (இறைவனிடம்) வாதாடும். மேலும் "ஸூரஹ் அல்-பகரஹ்" அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். மேலும் இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள்.
(முஸ்லிம்:- 1,470)
சுப்ஹானல்லாஹ்...!
புனித அல் குர்ஆனை ஓதுவதன் மூலமாக எத்தனையோ விதமான நன்மைகளை அல்லாஹ் எங்கள் மீது இறக்கி வைக்கின்றான். அதேபோன்று மனித சமுதாயத்திற்கே தீங்கு விளைவிக்கக்கூடிய கொடிய சூனியக்காரர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் இந்தப் புனித அல்குர்ஆன் ஓர் அத்தாட்சியாக இருக்கின்றது.
ஆகவே கண்ணியம் மிகுந்த இந்தக் குர்ஆன் அருளப்பட்ட புனிதமான ரமலான் மாதத்தை நாம் அடைந்திருக்கின்றோம். எனவே குர்ஆன் அருளப்பட்ட இந்த முபாரக்கான மாதத்தில் பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களும் பொதிந்திருக்கக்கூடிய இந்தப் புனித அல்-குர்ஆனை ஓதுவதற்கும், ஓதுவதன் மூலமாக கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அடைந்து கொள்ளவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்வானாக....
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS