தற்போதைய உலக மக்களினால் 200 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களால் பின்பற்றப்படக்கூடிய முஹம்மத் நபி ﷺ அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்ப...
தற்போதைய உலக மக்களினால் 200 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களால் பின்பற்றப்படக்கூடிய முஹம்மத் நபி ﷺ அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை பல ஹதீஸ்கள் மூலமாகவும், வரலாற்றுத் தொடர்கள் மூலமாகவும் நாம் அறிந்திருக்கின்றோம்.
ஆடம்பரம் இல்லாத ஒரு தளபதி. கொலை, கொள்ளை, மது, மாது, சூது இவைகளுக்கு எதிராகப் போராடிய மிகப்பெரும் சக்கரவர்த்தி. பெண்கள் சுதந்திரத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த உலகத்திற்குத் தந்தவர். பல நாட்டு அரசர்களும் உங்களுக்கு என்ன வேண்டும்?, தேவையான அனைத்தையும் நாங்கள் தருகிறோம் என்று சொல்லியும் மறுத்தவர் முஹம்மத் நபி ﷺ அவர்கள். இப்படியான ஓர் மிகப் பெரும் சக்கரவர்த்தியின் நிலை அன்று எப்படி இருந்தது?.
நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது எமக்குக் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வுகளே ஏராளமாக உள்ளன. அப்படியாய கண்ணீரை வரவழைக்கும் ஓர் நிகழ்வைப் பற்றிப் பார்ப்போம்.
உமர் (ரழி) அவர்கள் (தற்போது) மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவு கூர்ந்தார்கள். அந்த நேரத்தில் "நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம் கூடக் கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டுக் கிடப்பதை நான் கண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.சுப்ஹானல்லாஹ்...!
(முஸ்லிம்:- 5,698)
எப்படிப்பட்ட ஓர் வருமை. நீதிக்காகவும் நேர்மைக்காகவும் போராடிய மாபெரும் தலைவரின் நிலை இப்படித்தான் இருந்தது. தன்னுடைய பசியை தீர்த்துக் கொள்வதற்காகவாவது ஓர் ஈச்சம் பழம் கூட இல்லாத ஓர் நிலை!.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக்கொண்டு தொழுவார்கள்.மாபெரும் அரசரின் வீடு இப்படித்தான் இருந்தது. ஒரு பாய், அந்தப் பாய் தான் இரவில் கதவாகவும், பகலில் விரித்துப் படுப்பதற்குப் படுக்கையாகவும் இருந்திருக்கின்றது. இவ்வாறு தான் அவர்களுடைய வீடும் அன்றாட வாழ்க்கையும் இருந்துள்ளது. இன்னும் இது போன்ற கண்களை கசக்க வைக்கும் ஏராளமான செய்திகள் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கின்றன.
(புஹாரி:- 730)
ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த வாழ்க்கையை விருப்பத்தோடு தான் ஏற்றுக் கொண்டார்கள். மாறாக அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்பியிருந்தால் அவர்களைப் போன்று இந்த உலகத்தில் ஆடம்பரமாக வாழ எவராலும் முடியாது என்ற அளவுக்கு வாழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் இறைவனுடைய புறத்திலிருந்து நபியே! நீங்கள் கேட்டால் இந்த உஹது மலையைக் கூட உங்களுக்குத் தங்கமாக மாற்றித் தருவதற்கு நாங்கள் தயார் என்று வந்த செய்திகளையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
ஆகவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏழ்மையைத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் அவர்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்தும் காட்டினார்கள். எனவே அவர்களுடைய அந்த வாழ்க்கைத் தத்துவங்களை எமது வாழ்க்கையிலும் கடைபிடித்து வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்வானாக....
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS