சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். அதேபோல் ஸஹாபியப் பெண்மணிகளும் அல்லாஹ்வின் திருப்திக்காகவே வாழ்ந்தவர்கள். இப்படி இறைவன...
சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். அதேபோல் ஸஹாபியப் பெண்மணிகளும் அல்லாஹ்வின் திருப்திக்காகவே வாழ்ந்தவர்கள். இப்படி இறைவனுடைய திருப்திக்காகவும், பொருத்தத்திற்காவும் வாழ்ந்த கணவன், மனைவி குறித்த ஒரு வரலாற்று நிகழ்வு தான் இப்பதிவு...
ஒரு சஹாபி அருமை நாயகம் ﷺ அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஓர் பேரீத்தம் பழ மரம் என்னுடைய தோட்டத்தை ஒட்டி இருக்கின்றது. அதை அவர் எனக்குக் கொடுத்தால் அதையும் சேர்த்து எனது வீட்டுச் சுற்றுச் சுவர்களை அமைத்துக் கொள்வேன். அதை எனக்கு வழங்குமாறு கட்டளையிடுங்கள்" என்று கூறினார்.
பின்பு அந்த மரத்திற்குச் சொந்தமான அச்சஹாபியை அழைத்துவரப்பட்டு அவரிடம் அந்த மரத்தை வழங்குமாறு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அந்த சஹாபி அந்த மரத்தை கொடுப்பதற்கு மறுத்துவிட்டார்.
இதை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அபூ தஹ்தாஹ் (ரழி) என்ற சஹாபி "என்னுடைய தோழரே! என்னிடத்தில் ஓர் பேரீத்தம் பழத் தோட்டம் ஒன்று உள்ளது. எனவே அந்தத் தோட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு அந்த ஒரு மரத்தை எனக்கு விற்று விடுங்கள்" என்று அந்த ஒரு மரத்திற்குச் சொந்தமான சஹாபியிடம் கூறினார்.
அந்தப் பேரித்தம் பழத் தோட்டத்தில் 600 பேரீத்தம் பழ மரங்கள் இருந்தன. அந்த 600 பேரித்தம் பழ மரங்களையும் கொண்ட அத் தோட்டத்தை வாங்கிக்கொண்டு, அதற்குப் பகரமாக அந்த ஒரு மரத்தை அபூ தஹ்தாஹ் (ரழி) அவர்களுக்கு விற்றார் அச்சஹாபி.
பின்பு அந்த ஒரு மரத்தையும் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் கேட்டு வந்த அந்தச் ஸஹாபிக்கு கொடுத்து இதைக் கொண்டு உங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர்களை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நபிகள் நாயகம் ﷺஅவர்கள் "அபூ தஹ்தாஹ்வே! உங்களுக்காக மேலான அந்த சுவர்க்கத்தில் எத்தனையோ பேரீத்தப் பழ மரங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன" என்று அபூ தஹ்தாஹ் ரழி அவர்களிடம் நற் செய்தி கூறினார்கள்.
இந்த சந்தோஷமான செய்தியைக் கேட்டு விட்டு, தான் விற்ற அந்தத் தோட்டத்திற்கு ஆபூ தஹ்தாஹ் (ரமி) அவர்கள் சென்றார்கள். அப்பொழுது அந்தத் தோட்டத்தில் அவர்களுடைய மனைவி இருந்தார்.
இதைப் பார்த்த ஆபூ தஹ்தாஹ் (ரழி) அவர்கள் தனது அருமை மனைவியைப் பார்த்து "உம்மு தஹ்தாஹ்வே! உடனே இந்தத் தோட்டத்தில் இருந்து நீங்கள் வெளியேருங்கள். ஏனெனில் சுவர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பேரித்தம் பழ மரத்திற்காக இந்தத் தோட்டத்தை நான் விற்று விட்டேன்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அவருடைய மனைவி "இதுவே இலாபகரமான வியாபாரம். நீங்கள் சுவர்க்கத்திற்காக இந்த வியாபாரத்தை செய்தீர்கள் என்றால் நாம் உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறி விடுவோம்" என்று அந்தப் பெண்மணியும் மகிழ்ச்சியோடு தன் கணவரைப் பார்த்து கூறினார். அத்தோடு இருவரும் மகிழ்ச்சியோடு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.
ஆதாரம்:- முஸ்னத் அஹ்மத் - 12025
அறிவிப்பாளர்:- அனஸ் இப்னு மாலிக் (ரழி)
படிப்பினை...
01) நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதையாவது செய்யுமாறு வேண்டினார்கள் என்றால் அதற்காக எதையும் செய்யத் துணிந்த மனப்பான்மை சஹாபாக்களிடம் காணப்பட்டது.
இதனால்தான் அந்த ஒரு மரத்திற்காக தன்னுடைய 600 மரங்களைக் கொண்ட தோட்டத்தையே அர்ப்பணித்தார்கள்.
02) தன்னுடைய மனைவியிடத்தில் சுவர்க்கத்திற்காக இந்தத் தோட்டத்தை விற்று விட்டேன் என்று சொன்ன பொழுது அப்பெண்மணியும் மகிழ்ச்சியோடு அந்த நற்செய்தியை ஏற்றுக் கொண்டார்.
மாறாக ஏன் விற்றீர்கள்?, இதை இப்போது விற்பதற்கான காரணம்?, எதற்காக விற்றீர்கள்?, யாரைக் கேட்டு விற்றீர்கள்? என்றெல்லாம் அந்த மனைவி கணவரிடம் கேள்வி கேட்கவில்லை.
மாறாக சுவர்க்கத்திற்காக இந்தத் தோட்டத்தை விற்று விட்டேன் என்று சொன்ன பொழுது இதுதான் நல்ல வியாபாரம் என்று சொன்னார்களே அந்த மனைவிமார்கள் என்று எத்தனை பேர் இருக்கின்றார்கள்?
ஆக இது போன்று உள்ளங்கள் பூகிப்படையக்கூடிய எத்தனையோ சரித்திரங்கள் சஹாபாக்களுடைய வாழ்க்கையில் நடைபெற்றுள்ளன.
எனவே அவைகள் அனைத்தையும் எமது வாழ்க்கையில் சிறிதளவாவது கடைப்பிடித்து வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்வானாக...
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!