இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் மிக மிக முக்கியமானதாகும். இதனால்தான் சுத்தம் ஈமானின் பாதியாகும் என நபிகள் நாயகம் ﷺ அவர்களும் நவின்றார்கள். ஒ...
இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் மிக மிக முக்கியமானதாகும். இதனால்தான் சுத்தம் ஈமானின் பாதியாகும் என நபிகள் நாயகம் ﷺ அவர்களும் நவின்றார்கள்.
ஒரு முஸ்லிம் அவனுக்குக் கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றாலோ அல்லது புனிதக் கலாமாகிய திருக்குர்ஆனை தொட வேண்டும் என்றாலோ அதற்குக் கண்டிப்பாக வுழூ அவசியமாகும். இதே போன்று தான் குளிப்பும் அவசியமாகும்.அதாவது ஒரு முஸ்லிம் கடமையான குளிப்பை நிறைவேற்றி, வுழூவை செய்தால் மாத்திரமே அவனால் தொழவும், புனித அல் குர்ஆனை தொடவும் முடியும். ஆக இக் குளிப்பை எவ்வாறு இஸ்லாமிய ஒழுங்குகளுடன் நிறைவேற்றுவது என்பதைப் பார்ப்போம்.
ஒரு மனிதனுக்கு ஆறு விதமான முறையில் குளிப்புக் கடமையாகும். அதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான முறையில் இரண்டு வகையிலும், ஆணுக்கு மாத்திரம் குறிப்பான ஒரு முறையிலும், பெண்ணுக்கு மாத்திரம் குறிப்பான மூன்று முறையிலும் குளிப்புக் கடமையாகும். அவைகளைப் பின்வருமாறு உற்று நோக்குவோம்.
குளிப்பைக் கடமையாகும் காரியங்கள் ஆறு ஆகும்.
ஆண்களுக்கு:-
01) இந்திரியம் வெளியாகுதல்.
(ஒருவருக்கு இந்திரியம் வெளியான பட்சத்தில் அவருக்குக் குளிப்பது கடமையாகும்.)
பெண்களுக்கு:-
02) மாதவிடாய் முடிவடைதல்.
(ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலம் முடிந்தவடைந்தவுடன் அவளுக்குக் குளிப்பது கடமையாகும்.)
03) ஒரு தாய் பிள்ளையைப் பெற்றெடுத்தல்.
(ஒரு தாய் பிள்ளையைப் பெற்றெடுத்த பின் அவளுக்குக் குளிப்பது கடமையாகும்.)
04) பிள்ளைப் பேறு முடிவடைதல்.
(குழந்தை ஈன்றெடுத்த ஒரு தாய்க்கு பிள்ளை பேரு ஏற்படும் பட்சத்தில் அது முடிவடைந்தவுடன் குளிப்பது கடமையாகும்.)
இரு பாலாருக்கும் பொதுவானது:-
05) கணவன்-மனைவி ஒன்றிணைதல்.
(கணவன்-மனைவி ஒன்றிணைந்த பின்னர் அவ்விருவரும் குளித்து சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.)
06) மரணித்தல்.
(ஒரு மனிதன் மரணித்தால் அந்த ஜனாசாவை குளிப்பாட்டுவது கடமையாகும். இதுவே ஒரு மனிதனின் கடைசிக் குளிப்பாகும்.)
எனவே மேற்கண்ட ஆறு விடயங்களும் குளிப்பைக் கடமையாகி விடுகின்றது. எனவே இவ்வாறு கடமையானக் குளிப்பை நிறைவேற்றுவதற்கு இரண்டு பர்ளுகள் உள்ளன. அவைகள் பின்வருமாறு...
குளிப்பின் பர்ளுகள் இரண்டாகும்.
1) நியத்து வைத்தல்.
(அதாவது எனக்கு ஏற்பட்ட பர்ளான குளிப்பை நிறைவேற்றுகின்றேன் என்று உள்ளத்தால் நினைத்தபடி தண்ணீரை உடம்பில் ஊற்ற வேண்டும்.)
2) உடல் முழுவதையும் தண்ணீரால் நனைக்க வேண்டும்.
(மனித உடம்பில் உள்ள அத்தனை பகுதிகளையும் குளிக்கும் பொழுது தண்ணீரால் நனைக்க வேண்டும்.)
எனவே மேற்கண்ட ஆறு விடயங்களைக் கொண்டு குளிப்புக் கடமையாகும் பொழுது இந்த இரண்டு பர்ளுகளையும் பேணி பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.
COMMENTS