அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட ரஜப் மாதத்தின் சிறப்புகள்... (பகுதி- 2)
மாநபிகளார் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: "ரஜப் மாதம் அல்லாஹ்வுடைய மாதமாகும், ஷஃபான் மாதம் என்னுடைய மாதமாகும், ரமழான் மாதம் எனது உம்மத்தவர்களுடைய மாதமாகும்."
அல்லாஹ்வுடைய மாதம் என்பதன் நோக்கம் அது சங்கைப்படுத்தப்பட வேண்டிய மாதமாகும். அல்லாஹ்வின் தூதர் ﷺ அன்னவர்கள் அதனை சங்கைப்படுத்திக் காட்டினார்கள். ரஜப் மாதம் உதித்தவுடனேயே இந்த துஆவைக் கொண்டு அதனை சங்கைப் படுத்துவார்கள்.
اللَّهُمَّ بَارِكْ لَنَا في رَجَبٍ وَ شَعْبَانَ وَ بَلِّغْنا رَمَضَانَ
அல்லாஹும்ம bபாரிக்லனா fபீ ரஜபின் வ ஷஃபான வ bபல்லிஃனா ரமழான்
யா அல்லாஹ்!, ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு நல்லருள்பாலிப்பாயாக!, மேலும் எமக்கு ரமழான் மாதத்தை அடைந்து கொள்ளக்கூடிய பாக்கியத்தையும் தந்தருள்வாயாக.
ரஜப் மாதமே தொடரும் சங்கையான மாதங்களின் திறவுகோலாகும். இதனாலேயே ஸெய்யுதுனா இமாம் அபூபக்ர் அல்-வர்ரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "ரஜப் மாதத்தில் நீங்கள் விதைகளைத் தூவி விடுகிறீர்கள், ஷஃபான் மாதம் மழை மேகத்தைப் போன்றது, ரமழானோ மழையைப் போன்றது."
ரஜப் மாதத்திலேயே நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் சங்கையான பெற்றார்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அம்மாதத்திலேயே அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா இந்த அகிலத்தின் மிகச் சிறந்தப் படைப்பான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை தன் வயிற்றில் சுமந்தார்கள்.
ஏராளமாமான அறிஞர்கள் இம்மாதத்தின் 27ம் இரவில்தான் 'இராப் பயணமாம்' இஷ்ராவும் 'விண்ணேற்றமாம்' மிஃராஜும் இடம் பெற்றதாக உறுதிப்படுத்துகின்றார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் மிஃராஜ் பயனத்தின் போது அல்லாஹ்விடம் மாபெரும் அந்தஸ்துகளைக் கொண்ட தொழுகையை பரிசாகப் பெற்றுக் கொண்டதும் இந்த ரஜப் மாதத்திலாகும்.
ரஜப் மாதத்தின் முதலாம் இரவில் அல்லாஹ்வை சதா முன்னோக்கி இருந்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
அதாவது அல்லாஹ்வின் தூதர் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: "ஐந்து இரவுகள் இருக்கின்றன, அந்த இரவுகளில் கேட்கப்படும் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை."
அவை:-
01) ரஜப் மாதத்தின் முதலாம் இரவு
02) ஷஃபான் மாதத்யின் 15ம் இரவு
03) வெள்ளிக்கிழமை இரவு
04) ஈதுல் fபித்ர் இரவு
05) ஈதுல் அழ்ஹா இரவு.
மனதை சதா தூய்மைபடுத்திக் கொள்வதும், சதா பாவமன்னிப்புக் கோருவதும் தான் உள்ளத்தை பக்குவப்படுத்திக்கொள்வதற்கு சிறந்தவழியாகும். "ரஜப் மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். ஏனெனில், இம்மாதத்தின் ஒவ்வொரு மணித்தியாளங்கள் தோறும் மக்கள் நரக நெருப்பிலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட வண்ணமாக உள்ளனர்." (தைலமி)
ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் மீது சதா ஸலவாத்துக் கூறிய வண்ணம் இருக்க வேண்டிய மாதமாகும். ரமழான் மாதத்தில் சதாப் புனித அல்-குர்ஆனை ஓதிய வண்ணம் இருக்க வேண்டிய மாதமாகும். ஆகவேதான் ரஜப் மாதத்தில் பாவமன்னிப்புக் கோரிக் கொண்டே இருந்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கப்படுன்கிறது.
இந்த சங்கையான மாதங்களில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பலமடங்கு அதிகமாகவே நற்கூலிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் இம்மாதங்களில் செய்யப்படும் தீயச் செயல்களும் பாரதூரமாகவே கருதப்படுகின்றன. ஆகவே இம்மாதங்களில் சில நாட்களாவது நோன்பு நோற்று நன்மைகளை அள்ளிக் கொள்ளுங்கள்.
ஒரு பரிசுத்தமானது மாதம் ஒரு பரிசுத்தமான தளத்தைப் போன்றதாகும். மக்கா ஹரம் ஷரீபுக்குள் நுழைவதற்கு முன்பதாக ஒருவர் குளித்து தன்னை பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதனுள் இருக்கும் காலமெல்லாம் ஒருவர் தம் ஒவ்வொரு செயற்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இது போலவேதான் பரிசுத்த மாதமும். பரிசுத்தமாக அதனுள் நுழைய நாம் முயற்சிக்க வேண்டும். முழுமாதத்திலும் தீய செயல்களை விட்டும் தவிர்த்து நற் செயல்களால் அதை நிரப்பிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
யா அல்லாஹ்...!
○ ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் எமக்கு நல்லருள்பாலிப்பாயாக. மேலும் புனித ரமழான் மாதத்தை அடைந்துக்கொள்ளச் செய்வாயாக.
○ எம்மை யார் நன்மையின் பக்கம் வழி நடாத்தி, தீமையை விட்டும் எச்சரித்தார்களோ! அந்த மாநபி முஹம்மத் முஸ்தபா ﷺ அன்னவர்கள் மீதும், அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தவர்கள் மீதும், அருமை ஸஹாபாப் பெருமக்கள் மீதும், அன்னவர்களின் வழிகாட்டலைத் தொடர்ந்தவர்கள் மீதும் இறுதித் தீர்ப்பு நாள் வரை சலவாத்தும் சலாமும் சொல்லி அருள்வாயாக.
ஆமீன்..! ஆமீன்..! யாரப்பல் ஆலமீன்..!
Alhamdulillah... Very Useful... Alhamdulillah...
ReplyDelete