அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட ரஜப் மாதத்தின் சிறப்புகள்...
இஸ்லாமிய மாத வரிசையில் ரஜப் ஏழாவது மாதமாகும்.
அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த மாதத்தில் தான் தொடர்ந்து பொழிகிறது.
ரஜபு என்ற சொல் 'தர்ஜீபு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தர்ஜீபு என்றால் மதிப்புடையது. மாண்புடையது என்று பொருள் தரும்.
எனவே ரஜபு மாதம் மாண்புடைய மாதமாகும். ரஜபு மாதம் என் அல்லாஹ்விற்குரிய மாதம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அறியாமைக் கால அராபியர்களும் இம்மாதத்தை புனிதமாகக் கருதி உம்ரா செய்யவும், குர்பானி கொடுக்கவும் செய்தார்கள்.
இம் மாதத்தில் சண்டை போடுவதையும் பாவம் என்று எண்ணினார்கள். திருமறையில் கண்ணியமிக்க மாதங்கள் என்று குறிக்கப்படும் மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
ரஜபு மாத சிறப்பைக் குறிப்பிடும் போது சுவனபதியில் ரஜபு என்னும் ஆறு ஓடுகிறது. அதன் நிறம் பாலை விடவும் வெண்மையானதாகும். ஐஸை விடவும் குளிர்ச்சியானதாகும். தேனை விடவும் இனிமையானதாகும் என்பர்.
இம்மாதத்தில் குறிப்பாக இருபத்தி ஏழில் நோன்பு வைப்பவர்கள் 'மாஉல் ஹயாத்' என்னும் உயிரமிழ்த நீரை குடிக்கும் பேறு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இம்மாதத்தில் தான் நபிகளார் அவர்கள் குறைஷிகளின் கொடுமை தாங்காது தவித்த முஸ்லிம்களில் 15 பேரை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நஜ்ஜாஷி மன்னர் ஆட்சி செய்த அபிஷீனியா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
இம்மாதத்தில் முதலாவது வெள்ளிக்கிழமை இரவில் சிறப்பு வணக்கத்தில் சிலர் ஈடுபடுகிறார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மணிவயிற்றில் கரு தரித்த நாள் ரஜப் முதல் வெள்ளிக்கிழமைதான்.
இம்மாதம் பிறை 27 ல் (கி.பி. 621 பிப்ரவரி 22) தான் மிஃராஜ் (விண்ணேற்றம்) நிகழ்ந்தது.
இம்மாதத்தில்தான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தன் பயணத்தை துவங்கியது.
பிறை 12ல் நபி இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்த நாளாகும்.
இந்த மாதத்தின் நான்காம் பிறை எந்த நாளில் வருகிறதோ அதே நாளில் ரமளான் பிறை பிறக்கும் என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்.
ரஜபு மாதத்தை அடையும் போது கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த துஆவை கேட்பார்கள்.
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَـعْبَانَ وَبَلِّـغْنَا رَمَضَانَ
யா அல்லாஹ்! ரஜப், ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக.
COMMENTS