யாருக்காவது வட்டி உண்ண சலுகை உள்ளதா?
யாருக்காவது வட்டி உண்ண சலுகை உள்ளதா?
அல்லாஹ் பல அல்-குர்ஆன் வசனங்களின் மூலம் வட்டியை தடை செய்துள்ளான். நபி நாயகம் ﷺ அவர்களும் தடை விதித்துள்ளார்கள்.யாரெல்லாம் வட்டியை உண்கின்றார்களோ, அவர்கள் மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் பிடித்தவர்களாக எழுப்பப்படுவார்கள்.
இதற்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் வியாபாரத்தையும், வட்டியையும் ஒன்றாகவே சர்வ சாதாரணமாக கையாண்டார்கள்.
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்.
அல்-குர்ஆன் - (2:275)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக, முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
அல்-குர்ஆன் - (2:278)
தொடர்ந்தும் அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்:-
நீங்கள் (வட்டியை) விட்டு விட வில்லை என்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்-குர்ஆன் - (2:279)
அல்லாஹ்வின் மீதும் அவனது இரஸூலின் மீதும் போர் புரிகின்ற அளவிற்கு எங்களுக்குக் தகுதியும் கிடையாது. பலமும் கிடையாது. அல்லாஹ்வே எம்மை அடக்கி ஆளும் சர்வலோக இரட்சகன்.
மற்ற மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து உங்கள் செல்வம் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கின்றீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் தம் நற்கூலியை இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
அல்-குர்ஆன் - (30:39)
சொத்தும், செல்வமும் அதிகமாக இருந்தால் அதை வட்டிக்கு விட்டு பெருசா இலாபம் அடையனும் னு துடியாத் துடிக்கும் மனசு பல பேருக்கு...
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) தூராக்காக்கி விட்டது.
அல்-குர்ஆன் - (102:1)
அதை ஸகாத்தாகக் கொடுங்கள். இரட்டிப்பாகப் பெற்றுக் கொள்வீர்கள்!
அடுத்ததாக அல்லாஹ் பின்வருமாறு காபிர்களைக் குறித்துக் கூறுகின்றான்:-
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் காரணமாகவும், தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம், இவர்களில் காஃபிரானோருக்கு மறுமையில் நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
அல்-குர்ஆன் - (4:161)
இவ்வசனம் காஃபிர்களுக்கு மட்டுமல்ல. தன் கடமையை மீறிய முஸ்லிம்களுக்கும் தான்.
மேலும் ஒரு முறை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பின்வருமாறு கூறிக் காட்டினார்கள்.
ஒருவன் ஆற்றில் மூழ்கி இருப்பான். அவன் வெளியே வரும்போதெல்லாம் அவனை ஒருவர் கல்லால் அடித்துக் கொண்டிருப்பார். அந்தக் கல்லடி வாங்கக் கூடியவன் யார்? என நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் கேட்கபட்ட போது அவன் வட்டி வாங்கி உண்டவன் என்றார்கள்!
புஹாரி - (2085)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள், வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் சாட்சியாளரையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள்.
முஸ்லிம் - (325)
நான் வட்டி வாங்கவில்லை. மாறாக அதற்குக் கணக்குதான் எழுதினே என்று சொல்பவர்களே! தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டும் ஒரு திர்ஹத்தையேனும் உண்பவன் 36 முறை விபச்சாரம் செய்வதற்குச் சமனானதாகும்.
நூல் - (அஹ்மத்)
நான் வட்டியை குறைத்துத்தானே வாங்குகின்றேன், என்றெல்லாம் கிடையாது. ஹராம்... ஹராம் தான். இதில் சலுகை ஒன்றும் கிடையாது.
வட்டி வாங்கி ஸதகா செய்தாலும் சரி, வட்டி வாங்கி ஹஜ் செய்தாலும் சரி, வட்டி வாங்கி எந்த அமல் செய்தாலும் சரி அவர்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படமாட்டது.
COMMENTS