அல்லஹ்வின் தூதர், எம்பெருமானார் ﷺ அவர்களின் இவ்வுலக மறைவின் பின்னர் இறுதி நபித்துவம் நிறைவு பெற்றது. அத்தோடு சஹாபாப் பெருமக்களின் கிலாபத் ஆட்சிக் காலமும் அதன் தோற்றமும் உருவானது.
நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்குப் பின்னதாக அபூபக்கர் சித்தீக் (ரழி) அன்னவர்கள் இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில், அதே நீதியில், அதே பாணியில் தனது ஆட்சியை முறையாக நடாத்திச்சென்றார்கள்.
மதீனா நகரின் ஆட்சியாளர் அபூபக்கர்(ரழி) அவர்கள் ஒரு முறை தனது முதுகில் சில பல துணி மூட்டைகளைச் சுமர்ந்து கொண்டு மதீனா நகரின் கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்த நாபித்தோழர் உமர் கத்தாப் (ரழி) அவர்கள், "என் நண்பரே! நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்?, எதற்காக செளக்கிண்றீர்கள்? உங்கள் முதுகில் என்ன இந்த மூட்டை?" என அபூபக்கர்(ரழி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அபூபக்கர் சித்தீக் (ரழி) அன்னவர்கள், "உமரே! இந்த மூட்டையில் உள்ள ஆடைகளை கடை வீதிகளில் விற்பதற்காகச் செல்கிறேன்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள், "தங்களுக்கு ஆட்சிப் பொறுப்புக்களில் பல வேலைகள் இருக்கும் பட்சத்தில் இப்படியாக வியாபாரம் செய்து தங்களுடைய நேரங்களை வீணடிப்பது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை’ என ஆவேசமாகக் கூறினார்கள்.
அதற்கு அபூபக்கர் (ரழி) அவர்கள், "உமரே! பொறுமைக் கொள்ளுங்கள். நான் எனது ஆட்சிப் பணிகளில் மாத்திரம் கவனம் செலுத்தினால், என்னையே நம்பியிருக்கும் எனது குடும்பத்தறிற்கு யார்தான் பொறுப்பேற்றுக் கொள்வது?.
"மேலும் எங்களது குடும்பத்தினரின் அன்றாட வாழ்கைத் தேவைகளை யார்தான் நிறைவு செய்துத்தருவது?. இதனால்த்தான் எனது பழைய வியாபாரமான ஆடைத் தொழிலில் ஈடுபடுகின்றேன்" என்றார்கள்.
அதற்கு உமர் (ரழி) அவர்கள், அபூபக்கர் (ரழி) அவர்களிடம் "அப்படியென்றால் நீங்கள் அரச கஜானாவிலிருந்து நீங்கள் மேற்கொள்ளும் அரசாங்க வேலைக்காக ஊதியம் எடுப்பதில்லையா?" என வினவினார்கள்.
"நிச்சயமாக இல்லை. மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் அரச கஜானாவிலிருந்து தன்னுடைய சுய தேவைகளுக்காக எதையும் எடுத்யுக் கொள்ளவில்லையே."
அது மட்டுமல்லாமல் தனக்கும் தன் வம்சாவழியினருக்கும் அரச கஜானாவிலிருந்து எடுத்துக் கொள்வதை ‘ஹராம்’ என்று தடை செய்துள்ளார்களே!"
"ஆகையால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் செய்யாத, நடைமுறைப்படுத்தாத ஒரு விடயத்தை நான் எப்படி கையாள்வேன்?" என்று அபூபக்கர் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் பதிலுரைத்தார்கள்.
பின்னர் உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள், "இவ்விடயம் நிச்சயமாக சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விடயமாகவும் எனக்குப்படுகிறது"
"அரச வேலைகளைச் செய்வதற்காகவே ‘பைத்துல்மால்’ என்கின்ற அரச நிதியம் இருக்கின்ற பொழுது அதை எப்படித் நீங்கள் மறுக்க முடியும்?"
"எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கால கட்டத்திலேயே ஷரீஆ சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சியடைந்நதவராக உள்ள அபூஉபைதா (ரழி) அவர்களை நாடி இதற்கான ஓர் நல்ல தீர்மானத்தை முன்னெடுப்போம்" என்றார்.
பின்பு இருவருமே அபூஉபைதா (ரழி) அவர்களை நாடிச் சென்றார்கள்.
அதற்டுப் பின்பதாக விவரங்களை நன்கு கேட்டறிந்த அபூஉபைதா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரின் குடும்பத்தாருக்கு ‘பைத்துல்மால்’ என்கின்ற அரச நிதியம் ஆகுமாக்கப்படவில்லை."
"மேலும் அரச நிதியம் நபித்தோழர்களுக்காக, அதுவும் குறிப்பாக சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது."
"ஆகையால் அரச நிதியத்திலிருந்து அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒவ்வொரு மாதமும் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தார் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவு அவரது ஊதியமாக எடுத்துக் கொள்ளலாம்."
"மேலும் நீங்கள் வியாபாரம் செய்வதை விட்டு விட்டு தங்களது சிந்தனைகள் அனைத்தையும் இஸ்லாமிய அரசுப் பணிக்காக செலவிடலாம். அதற்கு எவ்வித தடையுமில்லை" என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
அதேவேளை ஒரு சிறிய தொகையினையும் அபூபக்கர் (ரழி) அவர்களின் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
அரசாளும் மன்னனாக இருந்தாலும், மதி நுட்பத்தினால் ஒரு சாதாரணக் குடிமகன் ஓர் நல்ல தீர்ப்பை வழங்குகிறார் என்றால், அத்தீர்ப்பை ஏற்று அதற்கு நபித்தோழர்கள் கட்டுப்படக்கூடிய தன்மை வேண்டும் என்பதுதான் கலீபாக்களின் அரசோச்சிய காலகட்டத்தின் நியதியாய் இருந்தது.
இதனடிப்படையில் அபூபக்கர் (ரழி) அவர்களும் அத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு சில காலங்கள் கடந்தோடின.
ஒரு முறை அபூபக்கர் (ரழி) அவர்களுடைய வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மணைவி, உணவை உண்டதன் பின்பு, சிறிது இனிப்பைக் கொண்டு வந்து அபூபக்கர் (ரழி) அவர்களின் முன்னால் வைத்தார்கள்.
உடனே அபூபக்கர் (ரழி) அவர்கள் "என்ன இனிப்பு இது?. இதை யார் கொண்டு வந்து தந்தார்கள்?" என வினவினார்.
அதற்கு அன்னாரின் துணைவியார் "யாரும் கொண்டு வந்து தரவில்லை. மாறாக நானேதான் சமைத்தேன். நீங்கள் பெரும் ஊதியப்பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்புப் பண்டத்தை சமைத்தேன்" என்றார்.
அதற்கு அபூபக்கர் (ரழி) அவர்கள் "நான் பெறும் ஊதியம் எங்கள் செலவுகள் போக, மிஞ்சும் அளவிற்கு அதிகமாக உள்ளதா?. எவ்வளவு பணம் மிஞ்சுகின்றது என்று சொல்" என சற்று ஆவேசத்தோடு கேட்டார்கள்.
அது மட்டுமல்லாது, அன்றிலிருந்து மிஞ்சும் அத்தொகையை தனது ஊதியத்திலிருந்து குறைத்தும் கொண்டார்கள். அதேநேரம் அளவிற்கு அதிகமாகப் பெற்றுக் கொண்ட தொகையில் செய்த இனிப்புப் பண்டத்தையும் உண்ண மறுத்துவிட்டார்கள்.
நபித்தோழர்களின் இவ்வாறான நன்னடத்தைகளே இஸ்லாமிய ஆட்சியின் இறையாண்மையை இன்று வரை பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றன.
மேலும் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் மரணத்தருவாயில் இருக்கின்ற நிலையில், தன்னிடம் அரசாங்கச் சொத்தாய் இருந்த அமரும் ஈச்சம்பாய், உண்பதற்கும், அருந்துவதற்கும் பயன்படுத்திய தோல் துருத்திகள் மற்றும் மரபாண்டங்களை தனக்குப் பின்னால் வரும் கலீஃபாவிடம் ஒப்படைக்கும் படி கட்டளையிட்டார்கள்.
அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் மறைவுக்குப் பின்னால் அப்பொருட்களை பெற்றுக்கொண்ட உமர்(ரழி) அவர்கள் "அபூபக்கர் சரியான முன் மாதிரியை அமைத்துத் தந்துவிட்டார்கள். இனிமேல் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் யாரும் அவர் வகுத்த எளிமைகளை மீற முடியாது. அதேபோன்று இப்பொருட்களைத் தவிர்த்து வேறு எதனையும் நான் அரச நித்தியத்திலிருந்து பயன்படுத்தமாட்டேன்’ என உறுதி கொண்டார்கள்.
ஸுப்ஹானல்லாஹ்..!!
பரிசுத்த நபித்தோழர்கள் மற்றும் கலீபாக்களின் வாழ்க்கை அல்லாஹ் இரஸூலுக்கு பொருத்தமான முறையில் இறையச்சம் கொண்டதாக அமைத்திருந்ததது.
(நூல்: ஸஹாபாக்கள் வரலாறு)
COMMENTS