சுபஹிலிருந்து மஃரிப் வரைக்கும் உண்ணாமல், பருகாமல் இருப்பதும், இல்லறத்தில் வாழ்வில் ஈடுபடாமல் இருப்பதையும் கொண்ட கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது. இந்த மூன்று விடயங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும். என்றாலும் இவை தவிர ஓர் நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக அம்சங்களும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிப்பதும் அவசியமாகும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "யார் ஒருவர் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கையையும் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹு த்தஆலாவிற்கு தேவையற்ற ஒன்றாகும்."
[ நூல் : புகாரி - 1903 ]
அல்லாஹ் எதை தேவையில்லை எனக் கூறினானோ அதற்காக அல்லாஹ் எவ்விதக் கூலியையும் வழங்க மாட்டான். எந்த இலட்சியத்தை அடைந்து கொள்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து பசி பட்னியோடும், தாகத்தோடும் இருப்பதில் எப்பயனும் இல்லை. பொதுவாகவே பொய் புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும். என்றாலும் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து முற்றாக விலகிக் கொள்வது அவசியமாகும்.
நோன்பு நோற்றுக் கொண்டு சினிமா பார்ப்பதும், வியாபாரத்தில் கலப்படம் மோசடிகளைச் செய்வதும், பொய், புறம் பேசுவது மற்றும் தேவையில்லாத கலியாட்டங்களில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். மேலும் பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மேலும் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது ஒருவர் உங்களிடம் சண்டைக்கு வந்தால் அறியாமையாக நடந்து கொண்டால் (அல்லது) ஏசினால் நான் (ஒரு) நோன்பாளி எனக் கூறி விடுங்கள்."
[ நூல் : புகாரி - 1894 ]
ரமழான் காலத்தில் சண்டை, சச்சரவில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் பட்சத்தில் எவ்வளவு பக்குவமாக நாடந்து கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஏனைய்ய சாதாரண நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற தருணத்திலாவது அதிலிருந்து விழகியிருக்க வேண்டும். எமது நோன்பைப் பாழாக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
COMMENTS