ஒரு குழந்தை பிறந்து அதற்கு அடுத்து வரும் ஏழாம் நாளில் ஆண் குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும், அல்லது பெண் குழந்தையாக இருந்தால் அதற்காக ஓரு ஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் மற்றும் உறவினர்களுக்கு உணவளிப்பதற்குப் பெயர் அகீகா என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள்.
ஸல்மான் பின் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
"ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்காக அகீகா கொடுக்கப்படல் உண்டு. ஆகவே, அக்குழந்தைக்காக ஆடு அறுத்து குர்பானி கொடுங்கள். (மேலும்) அக்குழந்தையின் தலை முடியை களைந்து பாரத்தை இறக்கி விடுங்கள்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
[ நூல் : ஸஹீஹுல் புஹாரி - 5,471 ]
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. "யாருக்கேனும் ஒரு குழந்தை பிறந்து அதற்காக அவர் ஆட்டை அறுத்து (இறைவனுக்கு) வணக்கம்புரிய நாடினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆடுகளை ஆண் குழந்தைக்கும், ஒரு ஆட்டை பெண் குழந்தைக்கும் (அறுத்து அகீகா) கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
[ நூல் : முஸ்னத் அஹ்மத் - 6,530 ]
பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றலாமா?
குழந்தையின் பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு. குழந்தையின் பெற்றோர்கள் தான் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
அலி (ரழி) மற்றும் ஃபாதிமா (ரழி) ஆகிய தம்பதிகளுக்குப் பிறந்த ஹசன் மற்றும் ஹுஸைன் (ரழி) அவர்களுக்காக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். எனவே குழந்தையின் உறவினர்களும் அகீகா கொடுக்க முடியும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
"அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்காகவும் அகீகா கொடுத்தார்கள்."
[ நூல் : நஸயீ - 4,142 ]
COMMENTS