அரேபிய மொழியில் உழ்ஹிய்யா என்பதன் பொருள் முற்பகலில் பலிப் பிராணியை அறுப்பது என்பதாகும். வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லீம் மீதும் குர்பானி கொடுப்பது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
கால்நடைப் பிராணிகளில் இருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக ஆகியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி (உழ்ஹிய்யா) கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (உழ்ஹிய்யா கடமையாக ஆக்கியிருக்கிறோம்.)
[அல் குர்ஆன் - 22 : 34)
ஸெய்யிதுனா நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வழிமுறைகளில் ஒன்று தான் இந்தக் குர்பானி கொடுப்பதாகும்.
[நூல் : இப்னு மாஜா - 3127]
குர்பானி கொடுப்பது என்பது ஒரு வணக்கமாகும். இவ்வணக்கத்தை நாம் அல்லாஹ் அல்லாத வேறு யாருக்குக்கேனும் செய்ய முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது ஷிர்க்காக மாறி விடும்!
[நூல் : முஸ்லீம் - 4001]
உணமையில் எனது தொழுகையும், எனது குர்பானியும், எனது வாழ்கையும், எனது மரணமும் அனைத்தும் அகிலங்களின் இறட்சகனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
[அல் குர்ஆன் - 6 : 162]
மாதங்கள் 12 ஆகும். இதில் சிறப்புக்கள் பொருந்திய மாதங்கள் 4 ஆகும். இதில் ஒன்று தான் புனிதமிக்க துல் ஹஜ் மாதமாகும். இம்மாதத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று தான் குர்பானி கொடுப்பதாகும்!.
[நூல் : புகாரி - 4662]
ஏன் குர்பானி (உழ்ஹிய்யா) எம்மீது கடமையாக்கப்பட்டது:
குர்பானி எம்மீது கடமையாக்கப்பட்டதன் நோக்கம் ஸெய்யிதுனா நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் அல்லாஹ்விற்காக செய்த தியாகத்தை ஞாபகம் கூறும் விதமாகத்தான் அல்லாஹ் எங்கள் மீது குர்பானி எனும் அமலை கடமையாக்கி உள்ளான்!
ஸெய்யிதுனா நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட காலத்தின் பின்னர் பிறந்த தனது மகனை அறுத்து பலியிடுவதாகக் கனவு கண்டார். எனவே அக்கனவை அல்லாஹ்விற்காக நிறை வேற்ற முயலும் பொழுது அதற்கு மாறாக அல்லாஹ் மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டைப் அறுத்துப் பலியிடச் செய்தான். இதனை ஞாபகம் கூறும் விதமாகத்தான் குர்பானி எனும் அமல் எமக்கு அல்லாஹ்வால் கடமை ஆக்கப்பட்டுள்ளது.
[அல் குர்ஆன் - 37 : 102 & 108]
குர்பானி (உழ்ஹிய்யா) கொடுப்பதன் நோக்கம்:
நாம் ஒட்டகம், மாடு அல்லது ஆடுகளை குர்பானி கொடுப்பதன் மூலம் அல்லாஹ்விற்கு எவ்விதப் பயனும் இல்லை. மாறாக நாம் இதைச் செய்யும் பொழுது தக்வாவுடன் செய்ய வேண்டும். மேலும் இதில் ஒரு போதும் பெருமை - முகஸ்துதி கொள்ளக் கூடாது.
குர்பானி கொடுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசங்களோ அல்லது அவற்றின் உதிரங்களோ ஒரு போதும் அல்லாஹ்வை சென்றடைவதில்லை. மாறாக உங்களுடைய தக்வா (பயபக்தி) மட்டுமே அவனை சென்றடைகின்றது.
[அல் குர்ஆன் : 22 : 37]
ஸெய்யிதுனா நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பொறுத்தத்தை பெறுவதற்காக மட்டுமே தான் பெற்றெடுத்த மகனையே அறுத்து குர்பானி கொடுக்க முன் வந்தார்கள். இதுதான் குர்பானி கொடுப்பதன் உண்மையான நோக்கம். உள அளவில் தியாகம் செய்வதாகும்.
மேலும் சிலர் மற்றவர்கள் தன்னைப் பார்த்து புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அமலை செய்கின்றனர். இன்னும் சிலர் தான் குர்பானி கொடுத்த பின், குர்பானி கொடுக்காத நபர்களைப் பார்த்து ஏளனமாக கதைக்கின்றனர். இவ்வாறான செயல்களால் நாம் கொடுக்கும் குர்பானியினால் எப்பலனும் கிடைக்காது.
குர்பானிக்கான நிய்யத் எவ்வாறு வைப்பது:
அல்லாஹ்விற்க்காக இந்த பிராணியை அறுத்து குர்பானி கொடுக்கின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருந்தால் போதுமானதாகும். இதற்கு என்று தனி துஆவோ அல்லது நிய்யத்தோ கிடையாது.
குர்பானி (உழ்ஹிய்யா) கொடுப்பது பர்ளா அல்லது சுன்னத்தா:
குர்பானி கொடுப்பது என்பது சுன்னா முஅக்கதா (மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்)வாகும்.
உங்களது இறட்சகனுக்காக தொழுவீராக! (மேலும் அல்லாஹ்வின் பெயரில் பிராணிகளை) அறுத்து பலியிடுவீராக!
[அல்குர்ஆன் 108 : 2]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே மதீனாவில் இருந்த ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்து வந்தார்கள்.
[நூல் : திர்மிதி : 1589]
யார் குர்பானி கொடுக்க வேண்டும்:
வசதி வாய்ப்புக்கள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் குர்பானி கொடுக்க முடியும்.
யார் குர்பானி கொடுக்க தகுதியானவர்கள்:
01] முஸ்லிமாக இருக்க வேண்டும்.
02] பருவ வயதை எட்டியவராக இருக்க வேண்டும்.
03] புத்திசுவாதீனமுள்ளவராகவும் இருக்க வேண்டும்!
எந்தப் பிராணிகளை குர்பானி கொடுக்க முடியும்:
01] ஒட்டகம்
02] மாடு
03] ஆடு
[அல் குர்ஆன் - 22 : 34]
ஆகிய பிராணிகளை மட்டும் தான் எம்மால் குர்பானி கொடுக்க முடியும். மாறாக ஏனைய பிராணிகளை எம்மால் குர்பானி கொடுக்க முடியாது.
ஏன் என்றால் :
01] அல்லாஹ் தனது அருள் மறையாம் திருக்குரானில் [22:34] குர்பானி பற்றி கூறும் பொழுது ஒட்டகம், மாடு, ஆடு இந்த மூன்று பிராணிகளை மட்டுமே குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.
02] நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வாழ்ந்த காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் அல்லது தப்தாபியீன்கள் வாழ்ந்த காலத்திலோ இந்த மூன்று பிராணிகளைத் தவிர ஏனைய பிராணிகளை குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.
பெண் பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?
எம்மில் சிலர் பெண் பிராணிகளை குர்பானி கொடுக்க முடியாது என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் அல்லாஹ்வோ குர்பானி பிராணிகளை பற்றிக் கூறும் பொழுது பெண் பிராணிகளையும் சேர்த்தே கூறியுள்ளான்.
[அல்குர்ஆன் - 6 : 143 / புகாரி - 5556]
மேலும் இதில் மிக முக்கியமான ஒன்றுதான் குட்டி ஈன்று அதற்கு பால் கொடுக்கும் பெண் பிராணியை அறுக்க கூடாது.
[நூல் : முஸ்லீம் - 4143]
குர்பானி கொடுப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
ஒருவர் குர்பானி கொடுக்க போகின்றார் என்றால் அவரோ துல்ஹஜ் மாதத்தின் பிறையை தென்பட்ட நாள் முதல் குர்பானி கொடுக்கும் வரை அவருடைய நகம், முடியையோ வெட்டக் கூடாது.
[நூல் - முஸ்லிம் : 3655]
இந்த நகம், முடியையோ வெட்டக் கூடாது என்ற பேணுதளை குர்பானி கொடுக்கும் நபர் மாத்திரமே கடைபிடிக்க வேண்டும். மாறாக குடும்பத்தில் உள்ள அனைவரும் பேன வேண்டியதில்லை.
குர்பானிப் பிராணிகளின் வயது எவ்வாறு இருக்க வேண்டும்:
குர்பானி கொடுப்பதற்கு ஒட்டகம், மாடு அல்லது ஆடு வாங்குவதற்கு முன்பு அல்லது அதை தெரிவு செய்வதற்கு முன்பு அதனது வயதுகளை குர்பானி கொடுக்கும் அளவிற்கு பூர்த்தி ஆகி விட்டதா! என்று சரி பார்ப்பது மிக அவசியமானதாகும்.
01] ஆடு - ஓரு வருடம் பூர்த்தியானதாக இருக்க வேண்டும்.
02] மாடு - இரண்டு வருடம் பூர்த்தியானதாக இருக்க வேண்டும்.
03) ஒட்டகம் - ஐந்து வயது பூர்த்தியானதாக இருக்க வேண்டும்.
[நூல் : புகாரி - 5,560]
இவ்வாறாக வருடங்கள் பூர்த்தியானதான பிராணிகளை மாத்திரமே குர்பானி கொடுக்க முடியும்.
குர்பானிப் பிராணியை வளர்ப்பதன் அவசியம்:
எம்மில் பலர் நாம் கொடுக்க விருக்கும் குர்பானிப் பிராணியை கடைசி நேரத்தில் தான் வாங்கி குர்பானி கொடுக்கின்றோம். இதனால் பலர் குர்பானி கொடுக்கும் பொழுது எவ்வித தியாக உணர்வும் உள்ளத்தில் ஏற்படுவதில்லை. குர்பானிப் பிராணியை ஓரிரு நாட்களாவது வளர்ப்பதன் மூலமே அதை குர்பானி கொடுக்கும் பொழுது தியாக உணர்வு ஏற்படும். குருபானி கொடுப்பதன் நோக்கம் தியாக உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே.
மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்களே (வளர்த்து அதனை) கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் (வளர்த்து) கொழுக்கவைப்பார்கள்.
[நூல் : பத்ஹுல் பாரி]
குர்பானிக்கு தகுதியில்லாத பிராணிகள்:
குர்பானிக்காக பிராணிகளை வாங்குபவர்கள் குறையில்லா பரிபூரண தேக ஆரோக்கியத்துடன் உள்ள பிராணிகளையே தெரிவு செய்ய வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ளவாறு குறைகள் உள்ள பிராணிகளை நாம் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
01] காதுகள் வெட்டப்பட்ட பிராணிகள் (அது சிறிய அளவாக இருந்தாலும் சரி அல்லது பெரிய அளவாக அளவாக இருந்தாலும் சரி)
02) காதில் துளையிடப்பட்ட பிராணி (அது சிறிய அளவாக இருந்தாலும் சரி அல்லது பெரிய அளவாக அளவாக இருந்தாலும் சரி)
03] நொண்டிப் பிராணிகள்
04] பார்வையில் குறையுள்ள பிராணிகள்
05] ஏதுனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிராணிகள்
06] பால் கொடுக்கும் பிராணிகள்
07] சதையில்லாத மெலிந்த ஒல்லியான பிராணிகள்
08] கொம்புகள் உடைந்த அல்லது உடைக்கப்பட்ட பிராணிகள் (அது சிறிய அளவாக இருந்தாலும் சரி அல்லது பெரிய அளவாக அளவாக இருந்தாலும் சரி
[நூல் : திர்மிதீ - 1,532 & 1,417 / நஸயீ : 4,293]
ஒருவர் எத்தனைப் பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும்:
ஒரு குடும்பத்திற்கு ஓரு ஆட்டை குர்பானி கொடுப்பது போதுமானதாகும். தமது வீட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
நபிகள் நாயகம் ﷺ அவர்களது காலத்தில் ஸஹாபாக்கள் தமக்கும் தனது குடும்பத்தாருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள்.
மேலும் அதா இப்னு யஸார் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தனக்காகவும், தனது குடும்பத்தாரிற்கும் (சேர்த்து) ஒரு ஆட்டை (மட்டுமே) குர்பானி கொடுப்பார். (பின் அதை) அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
(நூல் : திர்மிதீ : 1587 | இப்னு மாஜா : 3147)
பெருமைக்காக இல்லாமல் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் வசதி படைத்தவர்கள் விருப்பம் கொண்டால் அதிகமான பிராணிகளை அறுத்து குர்பானி கொடுக்கலாம்.
[நூல் : புகாரி - 5,565]
குர்பானி எப்பொழுது கொடுக்க வேண்டும்:
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிவடைத்தவுடன் குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்பதாக குர்பானிப் பிராணியை அறுத்து விட்டால் அது குர்பானியில் சேராது.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பதாக ஒருவர் குர்பானி நிய்யத்துடன் ஒரு பிராணியை அறுத்தால், அவர் மீண்டும் தொழுகைக்கு பிறகு வேறொரு பிராணியை குர்பானி கொடுக்க வேண்டும்.
[நூல் : புகாரி : 5,560]
குர்பானிப் பிராணியை அறுப்பதன் ஒழுங்கு முறைகள்:
எந்த இடத்தில் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும்:
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் குர்பானிப் பிராணியை திடலிலும் அறுத்துள்ளார்கள் மற்றும் அதை வீட்டிலும் அறுத்துள்ளார்கள். நாம் திடலோ அல்லது வீட்டிலோ ஏதேனும் ஒரு இடத்தில் குர்பானிப் பிராணியை அறுத்துக் கொள்ள முடியும்.
[நூல் : புகாரி - 5,552 & 5,545]
குர்பானிப் பிராணியை யார் அறுக்க வேண்டும்:
குர்பானி கொடுக்கும் பிராணியை அதனை நிய்யத் வைத்த நபர் அறுக்கலாம். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தங்களின் கைகலினாலேயே குர்பானிப் பிராணியை அறுத்துள்ளார்கள்.
மேலும் குர்பானிப் பிராணியை அறுக்க முடியாதவர்கள், பலகீனமானவர்கள் வேறொருவரை வைத்தும் அறுத்துக் கொள்ள முடியும்.
[நூல் : புகாரி - 5,554 / அஹ்மத் : 22,086)
மேலும் வீட்டிலுள்ள பெண்கள் யாரேனும் குர்பானிப் பிராணியை அறுக்க விருப்பப் பட்டால் அவர்களினாலும் குர்பானிப் பிராணியை அருக்க முடியும். இதற்கு மார்க்க ரீதியாக எவ்வித தடையும் இல்லை.
[நூல் : புகாரி - 5,504]
குர்பானிப் பிராணியை விரைவாக அறுக்க வேண்டும்:
குர்பானிப் பிராணியை அறுப்பதற்கு முன்பு கத்தியை நன்றாக தீட்டி வைத்து அதனை விரைவாக அறுக்க வேண்டும். (மெது மெதுவாக அறுத்தல் கூடாது.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்; நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை (நங்கு) கூர்மை படுத்திக்க கொள்ளுங்கள். (மேலும்) விரைவாக அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்.
[நூல் : அஹ்மது - 16,490]
குர்பானிப் பிராணியை அறுக்கும் பொழுது ஓதும் துஆ:
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் ’
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால் அறுக்கின்றேன். மேலும் அல்லாஹ் மிகப்பெரியவன்.
[நூல் : முஸ்லிம் - 3,976]
கத்தியை நன்கு கூர்மை படுத்திக் கொள்ள வேண்டும்:
குர்பானிப் பிராணியை அறுப்பதற்கு முன்னர் அதை அறுக்கவிருக்கும் கத்தியை நன்றாக கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். குர்பானிப் பிராணியை படுக்க வைத்து அதன் கண் முன்னே கத்தியைத் தீட்டக் கூடாது. இவ்வாறு செய்வதினால் பிராணி பயந்து மிரள ஆரம்பிக்கும்.
மேலும் இவ்வாறு நாம் பிராணிக்கு முன் கத்தியை கூர்மையாக்குவது அப்பிராணியைத் துன்புறுத்துவது போன்றாகும். இதனால் தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இவ்வாறு செய்வதை தடை படுத்தியுள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள் : ஒருவர் ஒரு ஆட்டை அறுப்பதற்காக வேண்டி அதனை படுக்க வைத்து அதன் முன்னே கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் (அந்த மனிதரிடம்) இந்தப் பிராணியை பல முறை கொல்வதை நீங்கள் நாடுகின்றீர்களா?. இதை நீங்கள் படுக்கவைப்பதற்கு முன்னரே உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கி இருக்கக் கூடாதா? எனக் கூறினார்கள்.
[நூல் : ஹாகிம் - 4 / 257]
பிராணியை அறுப்பதற்கு முன்பு பிராணியை படுக்க வைக்க வேண்டும்:
நாம் ஆடோ அல்லது மாடோ குர்பானி கொடுக்கும் போது அந்தப் பிராணியை முறையாக ஒரு பக்கம் படுக்க வைக்க வேண்டும். எத்திசையின் பக்கம் வேண்டுமானாலும் படுக்க வைக்கலாம். கிப்லா திசையின் பக்கம் தான் படுக்க வைக்க வேண்டும் என்று நிபந்தனை ஏதும் இல்லை.
என்றாலும் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின் பிரகாரம் குர்பானிப் பிராணியை கிப்லா திசையில் படுக்க வைத்து அறுப்பது சுன்னத்தாகும்.
பிராணியை படுக்க வைத்ததன் பின்னர் அப்பிராணி மீண்டும் எழாமல் இருப்பதற்காக வேண்டி அவற்றின் கழுத்தில் காலை வைத்து ஊண்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்பிராணியை அறுக்கும் பொழுது அது துள்ளிக் குதித்து அறுப்பதைத் தடுத்து விடக்கூடும்.
[நூல் : புகாரி - 5,558)
மேலும் ஒட்டகத்தை அறுக்கும் பொழுது ஆடு, மாடு அறுப்பது போன்றல்லாமல் ஒட்டகத்தை நிற்க வைத்து அதன் கால்களை மாத்திரம் கட்டிய பின் அறுக்க வேண்டும்.
[நூல் : புகாரி - 1,712 & 1,713]
பிராணியை அறுத்த பின் இரத்தம் முழுமையாக வெளியியேறும் வரை காத்திருக்க வேண்டும்:
பிராணிகளை அறுக்கும் பொழுது நரம்புகள் நன்கு வெட்டப்பட்டு அவற்றிலுள்ள இரத்தம் முழுமையாக வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும். அது போன்று பிராணி முழுமையாக இறந்த பின்னரே அதை உரிக்க ஆரம்பிக்க வேண்டும்.
மேலும் இஸ்லாமிய மார்க்கத்தின் பிரகாரம் இரத்தத்தை உண்பது ஹராமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக எந்தப் பிராணியின் இரத்தத்தையும் உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிலர் இந்த சட்டத்தை அறியாமல் வெளியாகும் இரத்ததை பிடித்து வைத்து அதை சமைத்து உண்கின்றார்கள். ஆனால் இதை அல்லாஹ் நேரடியாகவே தடை செய்துள்ளான்.
[அல்குர்ஆன் - 2 : 173]
குர்பானி கொடுப்பவரின் குடும்பத்தினர்கள் வர வேண்டுமா?
பிராணியை அறுத்து குர்பானி கொடுக்கும் போது வீட்டார்கள் அனைவரும் வந்து நிற்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.
வீட்டில் உள்ளவர்களில் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் நிற்கலாம். மேலும் வீட்டார்கள் வந்து நிற்க வேண்டும் என்று பைஹகீ கிரந்தத்தில் ஒரு ஹதீஸ் இருக்கின்றது. என்றாலும் இது ஒரு பலகீனமான ஹதீஸ் ஆகும். இன்னும் இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே இந்த ஹதீசிற்கு கீழே இது ஒரு பலகீனமான ஹதீஸ் என குறிப்பிட்டுள்ளார்கள்.
கூட்டுக் குர்பானியின் ஒழுங்குகள்:
ஒட்டகம் மற்றும் மாட்டினை மாத்திரம் ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டு குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்களில் உள்ளவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாட்டினை வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக ஒரு கூட்டுக் குர்பானி கொடுக்க முடியும்.
[நூல் : முஸ்லிம் - 2,325 / அபூதாவூத் - 2,425]
ஒட்டகம் மற்றும் மாட்டினை மட்டுமே தான் கூட்டுக் குர்பானி கொடுக்க முடியும். இதற்கு மாறாக ஆட்டில் கூட்டுக் குர்பானி கொடுக்க முடியாது.
குர்பானி கொடுக்காதவர்களுக்காண பகிரங்க எச்சரிக்கை:
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்; யாருக்கு வசதி வாய்ப்புக்கள் இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் எங்களுடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.
[நூல் : இப்னுமாஜா - 323]
பொதுவாக அறுத்த பிராணியின் மாமிசத்தில் உண்ணக் கூடாத பகுதிகள்:
01] ஆண்குறி
02] பெண்குறி
03] இரண்டு விதைகள்
04] நீர்பை
05] இரத்தம்
06] கட்டி - களலை
07] பித்தப்பை
ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் ஆகிய வற்றில் எந்தப் பிராணியாக இருந்தாலும் மேற்கண்ட உறுப்புகளை நாம் எப்பொழுதும் உன்னக் கூடாது.
[நூல் : சுனனுல்குப்ரா - 19,700]
குர்பானிப் பிராணியின் தோல்:
குர்பானிப் பிராணியின் தோலை தர்மம் செய்வது சுன்னத்தாகும். மாறாக விற்கவோ அல்லது கூலியாகக் கொடுப்பதோ கூடாது.
அறுக்கும் நபருக்கு கூலியாக (குர்பானிப் பிராணியின்) தோலையோ அல்லது அதன் மாமிசத்தையோ கொடுக்கக் கூடாது.
[நூல் : முஸ்லிம் - 2,320]
குர்பானியிப் பிராணியின் மாமிசத்தை சேமித்து வைக்கலாமா?:
ஆரம்ப காலகட்டத்தில் வறுமை நிலவியதன் காரணமாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் குர்பானியிப் பிராணியின் மாமிசத்தை சேர்த்து வைப்பதற்கு தடை விதித்திருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
எமக்குத் தேவைப்படும் அளவுக்கு குர்பானியிப் பிராணியின் மாமிசத்தை நாம் சேமித்து வைக்க முடியும். எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் சரியே.
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் :
குர்பானியிப் (பிராணியின்) மாமிசத்திலிருந்து உண்ணுங்கள், சேமித்துக் கொள்ளுங்கள், (மேலும்) தர்மம் செய்யுங்கள்!
[நூல் : முஸ்லிம் - 3,986]
யார் யார் குர்பானி மாமிசத்தை உண்ணலாம்:
அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்பவர்களுக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்!.
[அல் குர்ஆன் - 22 : 36]
அதாவது குர்பானி மாமிசத்தை நாமும் உண்ணலாம். அதுபோன்று ஏழை எளியவர்கள் மற்றும் உறவினர்களுக்கும் உண்ணக் கொடுக்கலாம். அதுபோல் காபிர்களுக்குக் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு நாட்கள் குர்பானி கொடுக்கலாம்:
துல் ஹஜ் மாதத்தின் பிறை 10 - 11 - 12 - 13 ஆகிய திங்களில் அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் மற்றும் அதனை அடுத்து வரும் தஷ்ரிகுடைய நாட்கள் வரை எம்மால் குர்பானி கொடுக்க முடியும்.
[நூல் : தாரகுத்னி - 284]
COMMENTS