இஸ்லாமிற்கு முன்னர், ஜாஹிலிய்யா காலத்தில் ஜுமுஆ நாள் அரூபா நாள் என அழைக்கப்பட்டது. அல் அரூபா என்றால் அருள் என்று பொருள் கூறப்படுகின்றது. அத்தினத்திற்கு யவ்முல் ஜுமுஆ என்பதாக கஃப் இப்னு லுஅய் என்பவர் முதன் முதலாக பெயரிட்டார். அவர் அத்தினத்தில் குறைஷிகளை ஒன்று சேர்த்து உபதேசம் செய்து, விருந்தோம்பல்களை செய்வார்.
அல் ஜுமுஆ என்பது அல்ஜம்உ (ஒன்றுதிரட்டல்) என்ற அடிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். முஸ்லிம்கள் வாரம் ஒரு முறை தொழுகைக்காக ஒன்று திரளும் நாள் என்பதாக அந்நாள் உலகெங்கும் அறிமுகமாகியது.
மக்காவில் ஹிஜ்ரத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் ஜுமுஆ கடமையாக்கப்பட்டிருந்தும் அங்கு கால சூழ்நிலை பொருத்தமற்றதாக இருந்ததனால் ஜுமுஆ தொழுகை அங்கு நிறைவேற்றப்படவில்லை, என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். வேறு சிலர் அது மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பதாக குறிப்பிடுகின்றார்கள்.
ஹிஜ்ரத்திற்கு மிகவும் அண்மித்த காலத்தில் மதீனாவில் அஸ்அத் இப்னு ஸுராரா (ரழி) அவர்கள் முதன் முதலாக ஜுமுஆ தொழுகையினுடைய இரண்டு ரகஆத்துக்களை நடாத்தி வைத்து மக்களுக்கு உபதேசம் செய்தார்கள் என வராலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அஸ்அத் இப்னு ஸுராரா (ரழி) அல்அன்ஸாரி அவர்கள் பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவராக இருந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு வபாத்தானார்கள். ஜன்னதுல் பகீஇலே முதலாவது அடக்கம் செய்யப்பட்ட நபித்தோழரும் இவர்களாகும்.
கஅப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் ஜுமுஆவுடைய அதானை கேட்டால் அஸ்அத் இப்னு ஸுராரா (ரழி) அவர்களுக்கு அள்ளாஹ்வின் அருள் வேண்டி துஆ செய்வார்கள். கஅப் இப்னு மாலிக் (ரழி) அவர்களுடைய மகன் ஹஸ்ஸான் (ரழி) அவர்கள், தந்தையே! நீங்கள் ஜுமுஆவுடைய அதான் கேட்கும் நேரத்தில் அஸ்அத் இப்னு ஸுராராவிற்கு ஏன் துஆ செய்கின்றீர்கள் என்று வினவிய போது, அவர்களே முதன் முதலாக மதீனாவில் ஜூமுஆ தொழுகைக்காக எங்களை ஒன்றுதிரட்டினார்கள். (ஜுமுஆவுடைய அதானை கேட்கும் வேளையில் அவரது ஞாபகம் வருகின்றது) என கஅப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் பதிலளித்தார்கள்.
வேறு சில ரிவாயத்களில் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களும் அஸ்அத் இப்னு ஸுராரா (ரழி) அவர்களும் இணைந்து மக்களை ஒன்று திரட்டி ஜுமுஆ கடமையை நிறைவேற்றுவார்கள் என்று வந்துள்ளது.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் பொழுது ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை குபாவிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு மஸ்ஜிதை கட்டினார்கள். அதுவே மஸ்ஜிதுல் குபா என்று அழைக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 01 ரபியுள் அவ்வல் மாதம் பிறை 16 வெள்ளிக்கிழமை குபாவில் இருந்து மதீனா முனவ்வரா நோக்கிப் புறப்பட்டார்கள். "பனூ ஸாலிம்" என்ற கோத்திரம் வாழும் பிரதேசமான "வாதி ராணூனா" பகுதியிலேயே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முதலாவதாக ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினார்கள்.
அந்த இடத்தில் உள்ள மஸ்ஜித் "மஸ்ஜிதுல் ஜுமுஆ" என்று அழைக்கப்படுகின்றது. மேலும் "மஸ்ஜிதுல் வாதி, மஸ்ஜிதுல் ஆதிகா, மஸ்ஜிதுல் குபைப்" போன்ற பெயர்களும் மஸ்ஜிதுல் ஜுமுஆவிற்கு கூறப்படுகின்றது. மஸ்ஜிதுல் குபாவிற்கு வடக்கு திசையில் சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மஸ்ஜித், மஸ்ஜிதுந் நபவிக்கு சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகின்றது.
அங்கு ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றிய நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மதீனா முனவ்வராவை சென்றடைந்தார்கள். அங்கே தமது மஸ்ஜித் ஆகிய மஸ்ஜிதுந் நபவியை நிறுவினார்கள். அதன் பிறகு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வாரந்தோறும் ஜுமுஆ தொழுகையை மஸ்ஜிதுந் நபவியிலே நிறைவேற்றினார்கள்.
மேலும் வரலாற்றில் இரண்டாவதாக ஜும்ஆத் தொழுகை நடைபெற்ற மஸ்ஜிதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை தொடர்பான குறிப்புகளுக்கு இங்கே தொடவும். 👇👇👇
உலகின் இரண்டாவது ஜும்ஆ மஸ்ஜித்
COMMENTS