அல்லாஹ் ஒரு ஜடம் அல்லது ஏதோ ஒரு இடத்தில் இடம் எடுத்து இருக்கிறான் அல்லது மிஃராஜின் போது முஹம்மத் ﷺ அவர்கள் எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு ...
அல்லாஹ் ஒரு ஜடம் அல்லது ஏதோ ஒரு இடத்தில் இடம் எடுத்து இருக்கிறான் அல்லது மிஃராஜின் போது முஹம்மத் ﷺ அவர்கள் எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு அருகில் இருந்தார்கள் அல்லது அல்லாஹ் அர்ஷில் உட்கார்ந்திருக்கிறான் என்ற நம்பிக்கை கொண்டோர் இந்தக் குப்ரிய்யத்தான எண்ணங்களை தம் உள்ளத்தை விட்டும் அகற்றி இரு ஷஹாதத் கலிமாகளை கூறிவிடவும். ஏனெனில் மேற்குறித்த சிந்தனைகள் யாவும் அல்லாஹ்வை படைப்பினம் போல் நம்பியிருப்போரின் சிந்தனைகளாகும். மேற்குறித்த சிந்தனைகளுடையோர் அல்லாஹ்வை படைப்புகளுடன் ஏதோ ஒரு விதத்தில் உவமை செய்கிறார்கள். அத்தோடு பின்வரும் புனித அல்குர்ஆன் வசனத்தையும் தங்களையறியாது பொய்ப்பிக்கின்றார்கள்.
ليس كمثله شيء وهو السميع البصير
விளக்கம்:- " அல்லாஹ்வுடைய எதார்த்தத்திலோ, அவனது தன்மைகளிலோ, அவனது செயலிலோ அவனுக்கு ஒப்பாகக் கூடியது எதுவுமே இல்லை. அவன் யாவற்றையும் காதுகள் இன்றி கேட்பவனாகவும், கண்கள் இன்றி பார்ப்பவனாகவும் உள்ளான்."
( அஷ்ஷூரா / வசனம் 11)
முஹம்மத் ﷺ அவர்கள் மற்றும் சஹாபாக்கள் உட்பட பின்வந்த அனைத்து முஃமீன்களின் கொள்கைக்கு உட்பட்ட அல் அகீதத்துத் தஹாவியஹ் என்ற நூலைத் தந்த அஸ்ஸலபுஸ்ஸாலிஹீன்களில் ஒருவரான இமாம் அபூ ஜஃபர் அத்தஹாவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
"அல்லாஹ் அளவுகள், தீர்ச்சைகள், கோணங்கள், கை, கால், முகம், போன்ற உறுப்புகள் உதடு, நாக்கு, போன்ற சிறு உறுப்புகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன்"
மேற்கூறப்பட்ட பண்புகள் எதுவும் அல்லாஹ்வுக்கு இருப்பதாக நம்பிக்கை கொள்ளக்கூடாது.
இடம் எனப்படுவது சடப்பொருட்கள் தாம் அமைவு பெறுவதற்கு எடுத்துக்கொள்ளும் ஒரு வெற்றுப்பகுதியாகும். இடங்கள் என்பன அல்லாஹ்வால் படைக்கப்பட்டதாகும். அல்லாஹ் இடங்கள் படைக்கப்பட முன்னரும் இடம் எதுவுமின்றி உள்ளவன். எனவே அல்லாஹ் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறான் அல்லது எல்லா இடங்களிலும் யதார்த்தமாகவே இருக்கிறான் அல்லது அவன் உள்ளேபடைப்புக்குள்ளே இருக்கிறான் என்ற சிந்தனைகள், நம்பிக்கைகள் யாவும் அல்லாஹ்வைப் பற்றிய மோசமான நம்பிக்கை கொண்டோரின் குப்ரியத்தான நம்பிக்கைகள் ஆகும்.
அமீருல் முஃமீனீன் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மேற்குறித்த அதே கருத்தை பின்வருமாறு தெளிவாக கூறுகின்றார்கள்.
كان الله ولا مكان وهو الآن على ما عليه كان
"அல்லாஹ் இடங்கள் படைக்கப்பட முன்னரும் இடமின்றி உள்ளவன். இடங்களை படைத்ததன் பின்னரும் அவன் இடம் இன்றியே உள்ளான்."
மேலும் அல்லாஹ் ஏதோ ஒரு திசையில் தான் எதார்த்தத்தில் இருக்கிறான் என நம்புவது கூடாது. உதாரணமாக அல்லாஹ் மேல் திசையிலிருந்து கொண்டிருக்கிறான் அல்லது எல்லா திசையிலும் அவன் எதார்த்தமாக இருக்கிறான் என்று நம்பி இருப்பதை கூறலாம். இந்த நம்பிக்கைகள் யாரிடத்தில் காணப்படுமோ நிச்சயமாக அவர் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவரே. ஏனெனில் திசைகள் மொத்தம் ஆறு இருக்கின்றன. மேல்திசை, கீழ்த்திசை, வலது திசை, இடது திசை, முன் திசை மற்றும் பின் திசை ஆகியன. எந்த ஒரு படைப்பாயினும் அதை இன்னொரு படைப்புடன் கவனிக்கையில் மேற்கூறப்பட்ட திசைகளில் ஒரு திசையை கொண்டதாகவே காணப்படும். ஆகவே திசைகளில் அமைவு பெறுவது படைக்கப்பட்டவைகளின் இயல்பாகும். ஆனால் திசைகளையும் ஏனைய படைப்புகளையும் படைத்தவன் அல்லாஹ். திசை பெறுதல் என்ற பண்பைக் கொண்டு அவன் வர்ணிக்கப்படமாட்டான். ஏனெனில் அவன் படைப்புகளுக்கு முற்றிலும் மாற்றமானவன். யாராவது அல்லாஹ் மேல் திசையில் எதார்த்தத்தில் இருக்கிறான் அல்லது எல்லா திசைகளிலும் எதார்த்தத்தில் இருக்கிறான் என்று நம்பி இருப்பாரோ அவர் அல்லாஹ்வை படைப்பினத்துடன் ஒப்பிட்டவராகவே கவனிக்கப்படுவார். நஊது பில்லாஹி மின்ஹு.
அஸ்ஸலபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரான இமாம் அபூ ஜஃபர் அத்தஹாவீ அவர்கள் தனது கிரந்தமான அல்-அகீததுல் தஹாவிய்யஹ்வில்
لا تحويه الجهات التي
"ஆறு திசைகளில் எந்தத் திசையாளும் அல்லாஹ் உள்வாங்கப்படமாட்டான் என்பதே அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கையாகும்" எனக் கூறியுள்ளார்கள்
பூமியில் வாழும் நாங்கள் எவ்வாறு கஃபதுல்லாஹ்வை புனிதஸ்தலமாக எடுத்து எங்களது தொழுகையின்போது அதையே முன்நோக்கி தொழுகிறோம். அதை வலம் வருகிறோம். அதை அல்லாஹ் வரிசைப்படுத்தி வைத்துள்ளதால் அதை மதிக்கின்றோம். கன்னியப்படுத்துகின்றோம். இதைப்போலவே ஏழு வானங்களுக்கும் மேல் காணப்படும் அர்ஷும் திகழ்கிறது. அதை மலக்குமார்கள் வலம் வருகிறார்கள். அர்ஷை சூழ மழைத் துளிகளை விடவும் அதிக எண்ணிக்கை கொண்ட மலக்குமார்கள் இருந்து கொண்டு இருக்கின்றார்கள். பூமியில் உள்ளவர்களுக்கு புனிதஸ்தலமாக ஆக்கப்பட்டுள்ள கஃபதுல்லாஹ்விலே அல்லாஹ் தரிபட்டிருக்கின்றான் அல்லது உட்கார்ந்து இருக்கின்றான் என்று நம்பிக்கை கொள்ளக்கூடாதது போல் அல்லாஹ் அர்ஷிலும் உட்கார்ந்திருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ளக்கூடாது.
எனவே முஃமின்கள் ஆகிய நாம் வணங்கக் கூடிய அல்லாஹ் இடம் எடுத்துக் கொள்ளல், திசை பெற்றிருத்தல் போன்றவற்றை விட்டும் தூய்மையானவன். யாவற்றையும் படைத்தவன் அல்லாஹ். அல்லாஹ் தான் படைத்த எதன் பக்கமும் எந்தத் தேவையும் இல்லாதவன். அல்லாஹ் இடம் திசை இன்றியே உள்ளான்.