01) நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாத்தில் எவர் அழகிய சுன்னதினை நடைமுறைப் படுத்துகிறாரோ அதற்குரிய நன்மை அவருக்கும் உண்டு. அவரைத் தொட...
01) நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாத்தில் எவர் அழகிய சுன்னதினை நடைமுறைப் படுத்துகிறாரோ அதற்குரிய நன்மை அவருக்கும் உண்டு. அவரைத் தொடர்ந்து அதனைச் செய்பவர்களின் நன்மைகள் அவருக்கும் வழங்கப்படுவது போன்று (அதனை முதலாவதாக நடைமுறைப்படுத்தியவருக்கும்) அதே அளவு நன்மை உண்டு. இஸ்லாத்தில் தீமையான வழிமுறையை யார் ஏற்படுத்தினாரோ அதற்குரிய தீமை அவருக்கு உண்டு. அவரைத் தழுவி அதனைச் செய்பவர்களுக்கு கிடைக்கும் தீமை போன்றே அவருக்கும் உண்டு."
(அறிவிப்பாளர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் ரளி.... நூல்: முஸ்லிம் 1017, நஸஈ 2254, இப்னுமாஜா 191)
02) இதே கருத்தில் மற்றுமொரு ஹதீதினை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இப்னுமாஜா 192)
03) அதே கருத்தில் இன்னுமொரு ஹதீதினை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா 195)
04) இதே கருத்தில் வேறொரு ஹதீதினை ஹுதைபத்துல் யமானீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அறிவிக்கின்றார்கள்.
(அஹ்மத் 23:289, பஸ்ஸார் 2963, தஹாவீ ஃபீ முஷ்கில் ஆஃதார் 251-1542, ஹாகிம் ஃபில் முஸ்தத்ரக் 2:516-518)
05) இதே கருத்தில் இன்னுமொரு ஹதீதினை வாதிலத்து பின் அஸ்கஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஹைதமீ ஃபீ மஜ்மஉஸ்ஸவாஇத் 770, தபரானீ ஃபில் அவ்ஸத் 1:172)
இவை யாவற்றையும் விட அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தெட்டத் தெளிவாக இப்படி அறிவிக்கின்றார்கள்: "நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றினை இவர் ஏற்படுத்தினாலும் அது மறுக்கப்பட்டதாகும்.
(நூல்: புஹாரி 2697, முஸ்லிம் 1718, அபூதாவூத் 4606, இப்னுமாஜா 14)
அண்ணலாரின் அமுத வாய் அருளிய இந்தச் சொற்களை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். நமது மார்க்கத்தில் முன்பே உள்ள ஒன்றை முன்மாதிரியாகக் கொண்டு வேறு ஒன்றினை ஏற்படுத்தினால் அது ஏற்புடையதாகும் என்பதை இவை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு விளங்குவதற்கு 'இல்முல் உஸுல் மஃப்ஹூம் முகாலபா' என்றும் 'இல்முல் பதீஉவில் மத்ஹப் கலாமீ' என்றும் 'இல்முல் மன்திகில் கியாஸு இஸ்திஃத்னாயி' என்றும் கூறுவர்.
மேலும் நபி ﷺ அவர்கள் கூறினார்கள். " எவர் நன்மையைக் காண்பித்துக் கொடுத்தாரோ அவருக்கும் அதனைச் செய்பவர்களின் நன்மை போன்ற அளவு நன்மைகள் உண்டு.
(நூல்: முஸ்லிம் 1893, அபூதாவூத் 5129 திர்மிதி 2671)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: " எவர் தீமையைக் காண்பித்து வழி காட்டினாரோ அவருக்கு அதற்கான தீமையும், அவரைத் தொடர்ந்து அதனைச் செய்பவர்களின் தீமை போன்ற தீமையும் அவருக்கு உண்டு"
(நூல்: முஸ்லிம் 2674, அபூதாவூத் 4609, திர்மிதி 2674)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் அநீதமாகக் கொல்லப்படும் போதெல்லாம் முதன் முதலாக கொலை செய்து வழிகாட்டிய காபிலுக்கும் அந்த தீயதில் பங்கு உண்டு."
(நூல்: புகாரி 3335, முஸ்லிம் 1677, திர்மிதீ 2673, நஸஈ 3975, இப்னுமாஜா 2645, அஹ்மத் 3630)
மேலும் அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்: "எவரொருவர் நன்மையான செயல் ஒன்றுக்குப் பரிந்துரைப்பாரோ அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. எவரொருவர் தீயசெயல் ஒன்றுக்குப் பரிந்துரைப்பாரோ அவருக்கும் அதிலிருந்து ஒரு பங்கு உண்டு. அல்லாஹ்வோ அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் கொண்டவனாவான்."
(அல்குர்ஆன் 4:85)
மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக நாமே இறந்தோரை உயிர்ப்பிக்கின்றோம். அவர்கள் முற்படுத்தி வைத்தவற்றையும், (அவர்கள் மரணித்த பின்னும் நன்மையைச் சேர்த்து வைக்கின்ற) அவர்களின் (நற்செயலான) அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகிறோம்" (அல்குர்ஆன் 36:12)
எனவே "அவர்கள் முற்படுத்தியவை" என்பது சுன்னத்து ஹசனாவையும் மற்றும் தீய நடைமுறையான சுன்னத்துஸ் ஸய்யி ஆவையும் குறிக்கும் என்று விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
தொகுப்பு:- ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம் என்ற நூலின் ஆசிரியருமான மர்ஹும் ஆ.மு.இ ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாக்கவீ (ஹழரத்) அவர்களின் சுன்னத் - பித்அத் ஆதாரக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
COMMENTS